ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை விட்டு விலகிய போதிலும், நாங்கள் மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் இருந்தபோது அவர் 200 மில்லியன் டொலர்களை நம் நாட்டிற்கு வழங்கியதை நான் நினைவுகூர வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
சிறையிலிருந்து காலிதா ஜியா விடுதலை செய்யப்பட்டதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஷேக் ஹசீனா நீண்ட காலத்திற்கு முன்பே இதைச் செய்திருந்தால், அவர் இன்னும் பங்களாதேஷின் பிரதமராக இருந்திருக்க முடியும். பங்களாதேஷில் நிலைமை விரைவில் சீரடையும் என்று நம்புகிறோம். குறுகிய காலத்தில் பங்களாதேஷ் மீண்டு வரும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. இலங்கையில் எங்களுக்கு நடந்ததை நினைவில் கொள்ள வேண்டும். பங்களாதேஷின் மிகப்பெரிய முதலீட்டாளர்களில் ஒருவராக நாங்கள் இருப்பதால், அந்த நாட்டில் வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளோம்.
இவ்வுலகில் நிலைமைகள் சரியில்லை என்பதை இந்நிகழ்வுகள் தெளிவுபடுத்துகின்றன. ஆனால் இந்த திட்டங்களில் இருந்து இலங்கை விலகும் என்று அர்த்தமில்லை.
இந்த உலகளாவிய சூழலில், இலங்கையில் 600 ஏக்கர் நிலப்பரப்பில் சர்வதேச காலநிலை மாற்ற பல்கலைக்கழகத்தை நிறுவ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கு சட்டம் தயாரிக்கும் பணிகளை அடுத்த ஆண்டு தொடக்கத்தில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆற்றல்களைப் பயன்படுத்தி, விவசாயத்தை நவீனமயமாக்குதல் மற்றும் நீர் பற்றாக்குறையால் ஏற்படக்கூடிய பிரச்சினைகளைத் தணித்தல் ஆகியவற்றின் மூலம் 2040 ஆம் ஆண்டளவில் நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கும் பூஜ்ஜிய உமிழ்வு நிலையை அடைவதற்கும் இலங்கை பாடுபட்டு வருகிறது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
கொழும்பு சினமன் கிரேண்ட் ஹோட்டலில் இன்று (06) முற்பகல் ஆரம்பமான 2024 ஆம் ஆண்டுக்கான சுற்றாடல், சமூக மற்றும் ஆளுகை (ESG) மாநாட்டில் உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.