ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாளை (07) அறிவிக்கப்படவுள்ளார்.
தமது கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை நாளை காலை அறிவிக்கவுள்ளதாக கட்சியின் செயலாளர் நாயகம் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது நெலும் மாவத்தையில் உள்ள பிரதான கட்சி காரியாலயத்தில் நடைபெறவுள்ள விசேட வைபவத்தில் அறிவிக்கப்படவுள்ளது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தனி வேட்பாளரை அறிவிக்க அக்கட்சியின் அரசியல் குழு அண்மையில் நடவடிக்கை எடுத்துள்ளது.
அந்தத் தீர்மானத்துடன், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு தமது ஆதரவைத் தெரிவிக்க கட்சியின் உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளதுடன், ஜனாதிபதிக்கு ஆதரவளிக்க முன்வந்த உறுப்பினர்களின் ஆசன அமைப்பாளர் பதவிகளை நீக்குவதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தற்போது நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படி, புதிய அமைப்பாளர்களின் கீழ் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அமைப்பு நடவடிக்கைகளை மாவட்ட மட்டத்தில் செயற்படுத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கட்சிக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ நேற்று ஹொரண பிரதேசத்தில் கட்சி உறுப்பினர்கள் மத்தியில் உரையாற்றிய போது தெரிவித்தார்.