ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை ரணில் விக்கிரமசிங்க அழித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் காமினி லொகுகே தெரிவித்துள்ளார்.
தேர்தல் பிரசாரத்தை ஆரம்பிக்கும் போது எங்களுடன் யார் இருக்கிறார்கள் என்பது தெரியவரும் என அவர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவான பலரது பெயர்களை ஊடகங்கள் குறிப்பிட்டாலும், அவ்வளவாக இல்லை என்பது கட்சி என்ற ரீதியில் எமக்குத் தெரியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறு செயற்படுவது என்பது தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடப்பட்டதாகவும், ஆனால் கட்சி தீர்மானம் எடுப்பதற்கு முன்னரே ஜனாதிபதி ஒரு குழுவுடன் இணைந்து தீர்மானம் எடுத்ததாகவும் அது கட்சிக்கு பாரிய பிரச்சினை எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
கட்சியை கையாள்வதாயின் கட்சியுடன் இணைந்து தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டும் எனவும், அவ்வாறு இல்லாமல் இடம் விட்டு இடம் சென்று ஜனாதிபதி வேட்பாளரை பரிந்துரைப்பது ஏற்புடையதல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அப்போது கட்சி செயலிழந்ததாக அவர் தெரிவித்தார். இவ்வாறானதொரு நிலையிலேயே வேட்பாளரை முன்வைப்பது தொடர்பில் கட்சி தீர்மானித்துள்ளதாகவும் ஜனாதிபதியின் கோரிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் செயற்பட்டதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் காமினி லொகுகே மேலும் தெரிவித்தார்.