சாரணர் இயக்கம், கெடட் படைப் பிரிவு, இளைஞர் படையணி உள்ளிட்ட இளைஞர் அமைப்புகளை சகல வழிகளிலும் பலப்படுத்தி நாட்டின் முன்னேற்றத்திற்கு இளைஞர்களின் பரந்த பங்களிப்பைப் பெறுவதே தமது நோக்கம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
அதற்குத் தேவையான நிதி ஒதுக்கீடுகளை அரசாங்கம் ஏற்கனவே ஒதுக்கியுள்ளதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தி நாட்டின் எதிர்கால பயணத்திற்கு பரந்த பங்களிப்பைப் பெறுவது தனது நோக்கமாகும் எனவும் தெரிவித்தார்.
கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று (31) இடம்பெற்ற இலங்கை பெண் சாரணர் இயக்க உறுப்பினர்களுக்கு ‘ஜனாதிபதி பதக்கம் ‘ வழங்கும் நிகழ்வில் உரையாற்றும்போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.
சாரணர் இயக்க அங்கத்தவர் தொகையை 75,000 இல் இருந்து 150,000 வரை அதிகரிக்கத் தேவையான ஆதரவை வழங்குவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
சாரணர் இயக்கம், கெடெட் படை, இளைஞர் படையணி உள்ளிட்ட இளைஞர் அமைப்புக்கள் ஊடாகவும் போதைப்பொருள் தடுப்பு வேலைத்திட்டத்திற்கு பெருமளவில் பங்களிக்க முடியும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
தற்போது கல்விக்கான விரிவான திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது. அடுத்த சில வருடங்களில் அதற்கு அதிக நிதி செலவிட நேரிடும். சுகாதாரத் துறைக்கும் தேவையான நிதியை ஒதுக்கவும் திட்டமிட்டுள்ளோம் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
கல்வித்துறையை புத்தகங்களுக்கு மட்டும் மட்டுப்படுத்த முடியாது. பிள்ளைகள் முன்னேற புதிய வாய்ப்புகளைக் கண்டுபிடிக்க வேண்டும். எதிர்காலத்தில் அதற்கான பணத்தை செலவிடுவோம். சாரணர் இயக்கத்தை அனைத்து பிரிவுகளிலும் முன்னேற்ற எதிர்பார்க்கிறோம்.
மேலும், மாவட்ட அளவிலும், தேசிய அளவிலும் சாரணர் முகாம்களை நிறுவுவதற்கு குறிப்பிட்ட காலத்திற்கு அரசாங்கத்தினால் உதவிகளை வழங்க முடியும். அந்த வேலைத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு கல்வி அமைச்சுடன் இணைந்து செயற்படுமாறு கேட்டுக்கொள்கின்றேன்” எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.