follow the truth

follow the truth

November, 23, 2024
HomeTOP1தேயிலை கைத்தொழிலில் புதிய முன்னேற்றங்கள் அவசியம்

தேயிலை கைத்தொழிலில் புதிய முன்னேற்றங்கள் அவசியம்

Published on

ஏற்றுமதி பொருளாதாரத்தை நோக்கி நாட்டை நகர்த்த, இலங்கை தேயிலை கைத்தொழிலை அனைத்து பரிமாணங்களிலும் ஊக்குவித்தல் இன்றியமையாதது எனவும் இதற்கான முறையான திட்டம் அரச மற்றும் தனியார் துறைகளுடன் இணைந்து செயற்படுத்தப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

கொழும்பு சினமன் கிரேண்ட் ஹோட்டலில் இன்று (25) ஆரம்பமான “கொழும்பு சர்வதேச தேயிலை மாநாட்டின்” ஆரம்ப நிகழ்வில் உரையாற்றும்போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

நாட்டை ஏற்றுமதி பொருளாதாரமாக மாற்றுவதில் தேயிலை கைத்தொழிலுக்கும் பெரும் பங்கு உள்ளது. தேயிலை உட்பட எமது பெருந்தோட்டக் கைத்தொழில், 19 மற்றும் 20 ஆம் நூற்றாண்டுகளின் நிலப்பிரபுத்துவ பொருளாதாரத்திலிருந்து நவீன பொருளாதாரமாக எம்மை மாற்றியது.

தேயிலை கைத்தொழில் இல்லையென்றால் இன்று இந்நாட்டில் நவீனமயப்படுத்தல்கள் ஏற்பட்டிருக்காது. தேயிலை தொழில் இல்லாவிட்டால் ‘எல்ல’ பிரதேசம் சுற்றுலாத்தலமாக மாறியிருக்காது.

நாங்கள் இப்போது மற்றொரு விசேட கட்டத்தில் இருக்கிறோம். இங்கே நாம் யதார்த்தமாக இருக்க வேண்டும். 30 – 40 வருடங்களாக நிலம் மற்றும் தோட்டம் மூலம் பெறக்கூடிய வருமானத்தை இழந்த நாடாக மாறிவிட்டோம். அந்த வருமானத்தை மீளப் பெற தோட்டத்தையும் நாட்டையும் அபிவிருத்தி செய்ய திட்டமிட்டுள்ளோம்.

அதிக வருமானத்தை பெறுவதில் கவனம் செலுத்தியுள்ள சிறிய தோட்ட உரிமையாளர்கள் மற்றும் பெரிய நிறுவனங்கள் ஆகிய இரண்டு துறைகளிலும் முன்னேறும் விவசாய வர்த்தகம் எமக்கு அவசியம். இரண்டு தனித்துவமான கட்டங்கள் இருப்பதோடு அவற்றில் முதலாவது சம்பளப் பிரச்சினையைத் தீர்ப்பதாகும். கடந்த பொருளாதார நெருக்கடியின் போது மிகவும் பாதிக்கப்பட்ட மக்களில் பெருந்தோட்ட மக்களும் உள்ளனர் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

அத்துடன், பெருந்தோட்டம் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் தற்போதுள்ள அனைத்து லயன் அறைகளையும் அரசாங்கம் கையகப்படுத்தி கிராமங்களாக மாற்றுவதற்கு மீண்டும் வர்த்தமானி அறிவித்தலை வெளியிட எதிர்பார்த்துள்ளோம். அப்போது பெருந்தோட்ட வளர்ச்சியுடன் லயன் அறைகள் என்ற கருத்து ஒழிக்கப்படும் என எதிர்பார்க்கின்றோம்.

எமது நாட்டில் சிறு தோட்ட உரிமையாளர்கள் அதிகளவில் உள்ளனர், அவர்கள் மூலம் தோட்டத் தொழில்துறையை எவ்வாறு விவசாய வர்த்தகமாக மாற்றுவது என்பதில் கவனம் செலுத்த வேண்டும். நாங்கள் தேயிலையை மட்டும் பயிரிடுகிறோமா அல்லது உங்கள் பகுதிகளில் ஸ்மார்ட் விவசாயத்திற்கு இடமளிக்கிறோமா என்று தீர்மானிக்க வேண்டும். எதிர்வரும் காலங்களில் விவசாய வர்த்தகத்தின் வளர்ச்சிக்காக நாட்டின் ஏனைய பகுதிகளிலும் காணிகளை வழங்க எதிர்பார்க்கின்றோம். அதைப் பற்றி கண்டறிய உங்களுக்கு வாய்ப்பு உள்ளது.

எமது சில நிறுவனங்கள் வெளிநாடுகளுக்குச் சென்று தொழில் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளன. தேயிலை தொழிலில் இலங்கை முன்னணியில் இருக்கும் வரை அரசாங்கத்திற்கு பிரச்சினை இல்லை. அதனை நாம் முன்னேற வேண்டும். தேயிலை சந்தையில் இலங்கை ஆதிக்கம் செலுத்த வேண்டும்.

மேலும், நமது தேயிலை ஆராய்ச்சி நிறுவனம் பலப்படுத்தப்பட வேண்டும். அதற்காக அரசு மற்றும் தனியார் இணைந்து ஒரு வேலைத்திட்டத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த செயற்பாடுகளை நாம் அனைவரும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். ஏற்றுமதி பொருளாதாரத்துடன் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதில் தேயிலை தொழில்துறையின் புதிய ஊக்குவிப்பு மிகவும் முக்கியமானது. இந்த செயற்பாடுகளுக்கு அரசாங்கத்துடன் கைகோர்க்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கின்றேன்” என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் அரசாங்கத்தை உருவாக்க அரச ஊழியர்கள் அர்ப்பணிக்க வேண்டும்

மக்கள் ஆணைக்கும் பொது மக்கள் கொண்டிருக்கும் எதிர்பார்ப்புக்களை தற்போதைய அரசாங்கம் நிறைவேற்றத் தவறினால் நம்பிக்கையான எதிர்கால தொடர்பில் மக்கள்...

பொலிஸ் அதிகாரிகளின் பிரச்சினைகளை தீர்க்க வேலைத்திட்டம்

குறைந்த தரத்தில் உள்ள பொலிஸ் அதிகாரிகளின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக அவசர வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற...

சீன அரசாங்கத்தின் 1996 வீட்டுத் திட்டம் ஒப்பந்தம் கைச்சாத்து

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் வாழ்க்கை நிலைமையை மேம்படுத்தும் நோக்கில் சீன அரசாங்கத்தின் நிதியுதவியில் வீட்டுத்திட்டத்தின் இணை ஒப்பந்தம்...