மக்கள் விடுதலை முன்னணியின் மத்திய குழு உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்த கருத்து காரணமாக வானொலி கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஹட்சன் சமரசிங்கவின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன இன்று (23) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
தேர்தல் ஊடாக கணக்குகள் தீர்த்துக் கொள்ளப்படும் என்றும், நாட்டை விட்டு வெளியேற இடமளிக்க மாட்டோம் என்றும், ஒளிந்து கொள்ள இடமில்லை என ஹட்சனுக்கு தெரிவிப்பதாக கூறிய வசந்த சமரசிங்கவின் மிரட்டல் சமூக வலைதளங்களில் பரவி வருவதாக குணவர்தன தெரிவித்துள்ளார்.
தேர்தல் முடிந்து நாட்டை விட்டு வெளியேறினால் அந்த நாடுகளில் திசைகாட்டியின் பிரதிநிதிகள் அதிகமாக இருப்பதால் பார்த்துக் கொள்வார்கள் என வசந்த சமரசிங்க தெரிவித்தார்.
நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலை நடாத்துவதற்கு இவ்வாறான அச்சுறுத்தல்களை நிறுத்துமாறு மக்கள் விடுதலை முன்னணியிடம் கோரிக்கை விடுப்பதாகவும், ஊடகவியலாளர் ஒருவருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டால் அவர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்யும் போது அவர்களுக்கு தேவையான பாதுகாப்பு வழங்கப்படும் எனவும் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
வன்முறையற்ற ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்திற்காக நாம் செயற்படுமாறு பரிந்துரைக்கப்படுவதாகவும் அமைச்சர் கூறினார்.