ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றியினை சகிக்க முடியாத அரசியல் குழுக்கள் மேடைகளில் சேறுபூசும் பிரசாரங்களை மேற்கொண்டு அதிகாரத்தை பெற முயற்சிப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் ஜனாதிபதியின் காலநிலை மாற்றம் தொடர்பான சிரேஷ்ட ஆலோசகருமான ருவான் விஜயவர்தன தெரிவித்துள்ளார்.
அன்று ரணில் சவாலை ஏற்காமல் இருந்திருந்தால், இலங்கை இன்று இருக்கும் நிலையில் இருந்திருக்காது என்றும் அவர் கூறினார்.
‘ஜயகமு’ கம்பஹா பொதுச் சபையில் உரையாற்றும் போதே ருவான் விஜயவர்தன இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கம்பஹா மாவட்டத்திற்கே இன்றைய தினம் விசேட தினமாகும். ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்று இரண்டு வருடங்கள் நிறைவடைந்துள்ளன. அவரது இரண்டு வருட நிறைவு விழா கம்பஹாவில் இடம்பெற்றது.
ரணில் விக்கிரமசிங்க இலங்கைக்கு புதிய அரசியல் கலாசாரத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். இன்று இந்த மேடைகளைப் பார்க்கும்போது, அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த அரசியல் தலைவர்களும் உள்ளனர். இந்த நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பவே அவர்கள் தங்கியிருப்பதாக ருவான் விஜயவர்தன தெரிவித்தார்.