இலங்கையைச் சேர்ந்த தொழிற்சாலை முகாமையாளர் பிரியந்த குமார தியவடன படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் பாகிஸ்தான் அதிகாரிகளின் பதில் திருப்தி அளிப்பதாக பாகிஸ்தானுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் வைஸ் அட்மிரல் மொஹான் விஜேவிக்ரம தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்தால் இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவு பாதிக்கப்படாது என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
பாகிஸ்தான் அரசாங்கத்தின் உயர்மட்டக் குழுவொன்று இன்று (06) பாகிஸ்தானில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்திற்குச் சென்று சம்பவம் தொடர்பில் தமது அனுதாபங்களைத் தெரிவித்தது.
இவ்வாறான சம்பவங்களை குறைத்து மதிப்பிட முடியாது என இலங்கை உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், இந்த சம்பவம் தமது நாட்டையோ, மதத்தையோ அல்லது இனத்தையோ இலக்கு வைத்து நடத்தப்படவில்லையென உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அங்கு அவர் அதை ஒரு தனிப்பட்ட சம்பவமாகும் என்று குறிப்பிட்டார்.
கொலைச் சம்பவம் தொடர்பில் பல சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டதையும் அவர் நினைவு கூர்ந்தார்.