நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படுகின்ற டீ.சி.பீ நிதி அண்மையில் 19 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் அதில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெற்றுக்கொண்டமை சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
அதில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரிஷாட் பதியுதீனுக்கு சுமார் 8 1/2 கோடி ரூபா நிதி ஒதுக்கப்பட்டிருந்தது.
அதே நேரம் அதே கட்சியில் தேர்தல் மூலம் நாடாளுமன்றம் வந்த இஸ்ஹாக் ரஹ்மானுக்கும் சுமார் 10 கோடி ரூபா நிதி இதில் ஒதுக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில்தான் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.எஸ் அமீர் அலிக்கும் இந்த டீ.சி.பீ நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த கட்சியின் தலைவர் ரிஷாட் பதியுதீன் கடிதம் மூலம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் வேண்டுகோள் விடுத்த நிலையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் அதற்கு அனுமதி வழங்கியுள்ளார்.
அதன் படி சுமார் மூன்றரை கோடி ரூபாவை எம்.எஸ்.எஸ் அமீர் அலிக்கு ஜனாதிபதி செயலகம் ஒதுக்கியுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளுக்கு ஸ்மார்ட் க்ளாஸ் ரூம் பெற்றுக்கொடுத்தல், விளையாட்டு கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கவே இந்த நிதி அவர் மூலம் கோரப்பட்டுள்ளது.
இது தொடர்பான ரிஷாட் பதியுதீன் அனுப்பிய கடிதம் மற்றும் அதற்கு ஜனாதிபதி செயலகம் அனுப்பிய கடிதம் என்பன சமூக ஊடகங்களில் உலா வருகின்றது.