சரியான பொருளாதார முறை மூலம் நாட்டை முன்நோக்கி கொண்டு செல்லாவிட்டால் நாட்டுக்கு கிடைத்த வெற்றிகளை இழக்க நேரிடும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தெரிவித்துள்ளார்.
காலி கரந்தெனிய பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள கறுவா அபிவிருத்தி திணைக்களத்தின் பிரதான அலுவலகத்தை இன்று (10) திறந்து வைக்கும் நிகழ்வில் ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.
கறுவா அபிவிருத்தி திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் திறந்து வைக்கப்பட்டது.
200 ஆண்டுகளுக்குப் பிறகு கறுவா அபிவிருத்தித் திணைக்களத்தை ஆரம்பித்திருக்கிறோம். அதன்படி, நாட்டில் கறுவாச் செய்கையை மேம்படுத்தும் பணிகள் தற்போது மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
முதலில் கறுவா உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். அங்கு, ஒவ்வொரு ஏக்கரிலிருந்தும் அதிகபட்ச உற்பத்தியைப் பெற வேண்டும். மேலும், குறைந்த தரத்திலான கறுவாவுக்குப் பதிலாக உயர்தரத்திலான கறுவா வகைகளை வளர்க்க வேண்டும்.
மேலும், கறுவா பயிரிடும் நிலப் பரப்பை அதிகரிக்க வேண்டும். அரசாங்கம் புதிய காணிகளை வழங்குவதற்கும் அவர்களின் நிலத்தில் ஏனைய பயிர்களுடன் கறுவாவைப் பயிரிடுவதற்கும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இந்த நடவடிக்கை மூலம் கறுவா உற்பத்தியை மூன்று முதல் நான்கு மடங்கு வரை அதிகரிக்கலாம்.
மேலும் கறுவா விற்பனையை அதிகரிக்க வேண்டும். விற்பனை இல்லாமல் உற்பத்தியை அதிகரிப்பதில் எந்தப் பயனும் இல்லை. எனவே, விற்பனையை அதிகரிக்கத் தேவையான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஆலோசனைகளை வழங்க நடவடிக்கை எடுக்க முடியும். நிறுவனங்கள் அந்தப் பொறுப்பை ஏற்குமானால் அரசாங்கம் அவர்களுக்கு ஒத்துழைக்க எதிர்பார்க்கிறது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.