08.07.2024 – அதுருகிரிய துப்பாக்கிச் சூடு
‘கிளப் வசந்த’, ‘நயன’ பலி – வசந்தவின் மனைவி கவலைக்கிடம்
சுஜீவா ஓரளவு சீரான நிலையில் – காயமடைந்த மற்றவர்களுக்கு மேலதிக சிகிச்சை
வெற்று தோட்டாக்களில் ‘KPI’ எழுத்துகள் – கொலைக்கு பின்னால் ‘கஞ்சிபானி இம்ரான்’
அதுருகிரிய பிரதேசத்தை பீதிக்குள்ளாக்கிய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் மேலும் பல தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
பிரபல தொழிலதிபர் ‘சுரேந்திர வசந்த பெரேரா’ அல்லது ‘கிளப் வசந்த’ உட்பட இருவரது கொலை மற்றும் நான்கு பேரைக் காயப்படுத்திய சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ‘பச்சை குத்துதல்’ நிலையத்தின் உரிமையாளர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விசாரிக்கையில், டுபாய் இலிருந்து வந்த ஒப்பந்தம் ஒன்றின் பிரகாரம் ‘க்ளப் வசந்த’வை இந்த கடை திறப்புக்கு தான் அழைத்ததாக தெரிவித்துள்ளார்.
டுபாயில் இருந்து அவரது வங்கிக் கணக்கில் பத்து இலட்சம் ரூபா வரவு வைக்கப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
“துபாயில் இருந்து வந்த ஒப்பந்தத்திற்காக கிளப் வசந்தவை கொல்ல உதவி செய்தேன்.. அந்த திட்டப்படி தான் வசந்தவை பச்சை குத்தும் கடை திறப்பு விழாவிற்கு அழைத்து வந்து கொல்ல திட்டம் போட்டேன். அதற்காக துபாயில் இருந்து 10 லட்சம் ரூபாய் பெற்றேன். சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட அத்துருகிரிய பச்சை குத்தும் நிலையத்தின் உரிமையாளர் பொலிஸாரின் விசாரணையின் போது வாக்குமூலம் அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று (08) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ, தாக்குதல் இடம்பெற்ற இடத்தில் கிடந்த T-56 வெடிமருந்து உறைகளில் KPI என்ற ஆங்கில எழுத்துக்கள் எழுதப்பட்டிருந்ததாகத் தெரிவித்தார்.
இதன்படி ஐரோப்பாவிற்கு தப்பிச் சென்ற பாதாள உலகக் குழுத் தலைவன் கஞ்சிபானி இம்ரான் தலைமையில் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாகவும், கஞ்சிபானி இம்ரான் என்ற பெயரிலான எழுத்துக்களில் KPI என பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
நேற்று (08) காலை 10.00 மணியளவில் அதுருகிரிய நகரின் மணிக்கூண்டு கோபுரத்திற்கு அருகில் அமைந்துள்ள பச்சை குத்தும் நிறுவன திறப்பு விழாவின் போது இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.
‘கிளப் வசந்த’ மற்றும் பலர் மேல் தளத்தில் உள்ள பச்சை குத்தும் கடையினுள் நுழைந்த சில நிமிடங்களுக்குப் பிறகு, வெள்ளை நிற நீண்ட கை சட்டை மற்றும் வெள்ளை முகமூடி அணிந்த ஆயுதம் ஏந்திய இரண்டு கொலையாளிகள் ஒரு வெள்ளை காரில் இருந்து வந்து வணிக இடத்தின் மேல் தளத்தில் நுழைந்து இவ்வாறு துப்பாக்கிச்சூடு நடத்தி தப்பிச் சென்றது சிசிடிவி காட்சிகள் மூலம் தெளிவாக பதிவாகி இருந்தது.
முகமூடி அணிந்த இரண்டு கொலையாளிகள் இரண்டு T56 துப்பாக்கிகளுடன் பச்சை குத்தும் நிலையத்திற்குள் நுழைந்து கிளப் வசந்த மற்றும் அங்கிருந்தவர்கள் மீது சுட்டதையும் இது காட்டுகிறது.
பின்னர், வாடகைக் கொலையாளிகள் இருவரும் தாங்கள் வந்த வெள்ளை நிற காரில் தப்பிச் சென்றதுடன், தாக்குதலில் பலத்த காயமடைந்த கிளப் வசந்த உட்பட 6 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எனினும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் கிளப் வசந்த உயிரிழந்திருந்தார்.
நயனா என்ற நபரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.
உயிரிழந்த பிரபல வர்த்தகரான சுரேந்திர வசந்த பெரேராவுக்கு வயது 55 மற்றும் உயிரிழந்த மற்றையவருக்கு 38 வயது.
இவர்கள் கொழும்பு 07 மற்றும் அதுருகிரிய பிரதேசங்களில் வசிப்பவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
கிளப் வசந்தாவின் மனைவியும் மார்பில் சுடப்பட்டார்.
அவருக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டு ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் களுபோவில வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்கச் சென்ற பிரபல பாடகர் கே. சுஜீவாவின் இடது காலிலும் துப்பாக்கிச் சூடு ஏற்பட்டுள்ளதாகவும், அவர் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் டொக்டர் ருக்ஷான் பெல்லனகே தெரிவித்தார்.
காயமடைந்த எஞ்சியவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலை மற்றும் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த தாக்குதலின் பின்னர் அதுருகிரிய பொலிஸார், நுகேகொட குற்றப்பிரிவு மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இவர்கள் வந்த வெள்ளை நிற கார் நவகமுவ கொரதொட்ட பிரதேசத்தில் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்டதையடுத்து அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது கொலையாளிகள் காரை கொரதொட்ட பிரதேசத்தில் விட்டுவிட்டு வெள்ளை வேனில் தப்பிச் சென்றமை தெரியவந்துள்ளது.
பறிமுதல் செய்யப்பட்ட காரை சோதனையிட்டதில், அது போலி நம்பர் பிளேட் போடப்பட்ட கார் என்பது தெரியவந்துள்ளது.
நேற்று (08) மாலை 6.15 மணியளவில், 119 அவசர இலக்கத்திற்கு கிடைத்த தகவலின் பிரகாரம், புளத்சிங்கள அயகம டெல்மெல்ல பிரதேசத்தில் வெறிச்சோடிய காணியொன்றில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் பயன்படுத்திய வேனும் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவருடன் நாட்டின் முக்கிய பாதாள உலக தலைவர்கள் சிலருக்கும் தொடர்பு இருப்பதாக தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இலங்கை பாதாள உலகத்தின் தற்போதைய பிதாமகன் என அழைக்கப்படும் சில வருடங்களுக்கு முன்னர் கொல்லப்பட்ட ‘மாகந்துரே மதுஷ்’ கிளப் வசந்தவின் நெருங்கிய நண்பர் என தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும், இந்த தாக்குதலுக்கான சரியான காரணம் இதுவரை வெளியாகவில்லை எனவும், இது பாதாள உலக மோதலின் விளைவா? அல்லது தனிப்பட்ட தகராறு காரணமாக நடந்ததா என பொலிசார் விசாரித்து வருகின்றனர்.
இதேவேளை, இது தொடர்பான துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த ‘கிளப் வசந்த’வின் மனைவியின் கைப்பையில் இருந்து ரிவால்வர் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அது தற்போது பொலிஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ளது, அந்த ரிவால்வருக்கு உரிமம் உள்ளதா? இல்லையா? பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவா தெரிவித்தார்.
மூலம் : திவயின