follow the truth

follow the truth

April, 20, 2025
HomeTOP1பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் பணிக்குத் திரும்ப வேண்டும்

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் பணிக்குத் திரும்ப வேண்டும்

Published on

நாட்டின் எதிர்காலத்தைப் பொறுப்பேற்கவுள்ள இளைஞர்களின் வாழ்க்கையை மேலும் சீர்குலைக்காமல், அவர்களின் காலத்தை வீணடிக்காமல், அனைத்துப் பல்கலைக்கழகங்களின் கல்விசாரா ஊழியர்களையும் கடமைக்கு சமூகமளிக்குமாறு கேட்டுக்கொள்வதாக உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்தார்.

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் இரண்டு மாத சம்பளம் மற்றும் ஏப்ரல் மாதத்திற்கான மேலதிக நேரக் கொடுப்பனவுகளை வழங்குவதற்கும், அவர்களின் கோரிக்கைகளுக்கு முன்னுரிமை அளித்து, அவற்றை உதய செனவிரத்ன குழுவிற்கு சமர்ப்பித்து, 2025 வரவு செலவுத் திட்டத்தில் உள்ளடக்குவதாகவும் இராஜாங்க அமைச்சர் உறுதியளித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (05) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் இதனைத் தெரிவித்தார்.

‘’இந்நாட்டில் உள்ள 17 பல்கலைக்கழகங்கள் மற்றும் 19 ஒன்றிணைந்த பட்டப்பின்படிப்பு நிறுவனங்களின் 14,600 கல்விசாரா ஊழியர்கள் 65 நாட்களாக பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதால் முழு உயர்கல்வித்துறையும் முடங்கியுள்ளது. இந்நாட்டின் எதிர்காலத்தை பொறுப்பேற்கவிருக்கும் 250,000 இளைஞர்களின் வாழ்க்கை சீர்குலைந்து, அவர்களின் காலத்தை வீணடிப்பதுதான் இதன் துயரமான பிரதிபலனாகும்.

2019 இல் கொவிட் தொற்று, 2020 இல் பொருளாதார நெருக்கடி, 2021 இல் போராட்டம் போன்றவற்றால் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்ட இந்த மாணவர்கள், அந்த சவால்களையெல்லாம் எதிர்கொண்டு, பல்கலைக்கழகத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட 18 வீதமானோரில் உள்ளடங்கினாலும் கூட, இந்தப் பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டத்தால் அவர்கள் மேலும் குழப்பமடைந்திருப்பது மிகப் பெரும் துயரம் என்றே கூற வேண்டும்.

நான் இன்று இந்த நிலைமைக்கு வந்திருப்பது கல்வியினால் தான் அன்றி வேறு எந்த காரணத்தினாலும் அல்ல. கல்வியின் பெறுமதியை அறிந்த நான் இங்கு இருக்கும் போதும், நாட்டின் பல்கலைகழகங்கள் மூடப்பட்டுள்ளமையிட்டு மிகவும் வருந்துகிறேன். அவர்கள் கோரிய சம்பள உயர்வுக்கு திறைசேரி சம்மதிக்காத காரணம், இவர்களைத் தொடர்ந்து மேலும் பல்வேறு நிறுவனங்களும் சம்பள உயர்வு கோரியிருக்கிறது. எவ்வாறாயினும், இந்த கோரிக்கைகளை பரிசீலித்து 2025 வரவு செலவு திட்டத்தில் உள்ளடக்கப்படும் என்று திறைசேரி தெரிவித்துள்ளது.

இதேவேளை, இந்த நாடகத்தின் பின்னணியில் உள்ள பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் (FUTA) வெளியே வந்துள்ளது. 2010ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக தமது சம்பளத்தை அதிகரித்துள்ள இவர்கள், கல்வி சாரா ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க முயற்சித்து வரும் நிலையில், பல்வேறு நிபந்தனைகளுடன் கடிதம் அனுப்பி வருகின்றனர்.

இந்தப் பிரச்சினையைத் தீர்க்க பல்கலைக்கழகத்தின் பணத்தைப் பயன்படுத்தக் கூடாது என்று அவர்களின் இறுதிக் கடிதத்தில் தெரிவித்துள்ளனர். அவர்களால் எப்படி இவ்வாறு நிபந்தனை விதிக்க முடியும்? பல்கலைக்கழகங்கள் பொது மக்களின் வரிப்பணத்தால் செயற்படும் நிறுவனங்களே அன்றி, அவர்களின் சொத்து அல்ல. பல்கலைக்கழகங்கள் அதன் விரிவுரையாளர்களின் மாஃபியாவின் கீழ் வருவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. கல்வியைக் கட்டியெழுப்பி, மாணவர்களின் எதிர்காலத்தை பாதுகாப்பதே அவர்களின் தொழில்துறை நோக்கமாக இருக்க வேண்டும் என்று உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் கலாநிதி சுரேன் ராகவன் மேலும் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

2019 ஏப்ரல் 21 ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்புகளின் 6வது ஆண்டு நிறைவையிட்டு முஸ்லிம் அமைப்புகளின் கூட்டு அறிக்கை

2019 ஏப்ரல் 21 ஆம் திகதி நடந்த துயரமான ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு சம்பவங்களின் ஆறு ஆண்டுகளை இன்று...

கிறிஸ்தவ தேவாலயங்களில் வழிபாட்டிற்காக கலந்துகொள்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை

உயிர்த்த ஞாயிறு அன்று கிறிஸ்தவ தேவாலயங்களில் வழிபாட்டிற்காக கலந்துகொள்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு,...

ட்ரம்பின் பரஸ்பர வரி : அமெரிக்கா பறந்தது இலங்கை தூதுக்குழு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பால் அண்மையில் விதிக்கப்பட்ட வரிகள் தொடர்பில் பேச்சுவார்த்தையில் ஈடுபட இலங்கையின் தூதுக்குழு ஒன்று அமெரிக்காவிற்கு...