கடன் மறுசீரமைப்புச் செயற்பாடுகளுடன் இணைந்ததாக இருதரப்புக் கடன் வழங்குநர்களிடமிருந்து 05 பில்லியன் டொலர் கடன் வட்டி நிவாரணம் கிடைக்க இருப்பதோடு வர்த்தகக் கடன் வழங்குநர்களின் இணக்கப்பாட்டின் பிரகாரம் 03 பில்லியன் டொலர் கடனை வெட்டிவிடப்பட இருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
இதன் ஊடாக நாட்டு மக்களுக்கு 08 பில்லியன் டொலர் நிவாரணம் கிடைப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
20 இலட்சம் முழுமையான காணி உறுதிகளை வழங்குவதற்கான ‘உறுமய’ தேசிய வேலைத் திட்டத்தின் கீழ், குருணாகல் மாவட்டத்தில் 73,143 பேருக்கு காணி உறுதிகள் வழங்கப்படவுள்ளன.
அதன்படி இன்று (05) குருநாகல் வடமேல் மாகாண சபையின் கேட்போர் கூடத்தில் 463 பேருக்கு காணி உறுதிகளை அடையாள ரீதியாக வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்தார்.
நாட்டை புதிய பொருளாதாரத்துடன் முன்னோக்கி கொண்டு செல்வதற்காக குருணாகல் மாவட்டம் புதிய அபிவிருத்தி திட்டத்தின் கீழ் விரிவான அபிவிருத்திச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
கடனைத் திருப்பிச் செலுத்த எமக்கு 04 வருட கால அவகாசம் உள்ளது. மேலும், சுமார் 06 வருடங்கள் மிதமான சுமையுடன் கடனை செலுத்தும் வாய்ப்பும் கிடைக்கும். செலுத்த வேண்டிய வட்டியில் ஒரு தொகை வெட்டி விடப்பட்டுள்ளது. அதனால் 05 பில்லியன் டொலர்கள் நாட்டுக்கு எஞ்சும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
தற்போது தனியார் ஒப்பந்ததாரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். அதன்படி சுமார் 03 பில்லியன் டொலர்கள் குறைவடையும். எனவே நாம் செலுத்த வேண்டிய பணத்தில் இருந்து மொத்தம் 08 பில்லியன் டொலர்கள் வெட்டிவிடப்படும். மேலும், தளர்வான நிபந்தனைகளின் கீழ் 02 பில்லியன் டொலர்கள் வழங்கப்பட்டுள்ளன. அதில் சீனா , இந்தியாவின் உதவித் தொகைகள் அதற்குள் உள்ளடங்காது. இதன் மூலம் கடந்த இரண்டு வருடங்களில் 08 பில்லியன் டொலர்களை சேமித்துள்ளோம்.
விவசாயிகள் 2022-2023 வரையில் பெற்றுத்தந்த அறுவடையின் காரணமாகவே இந்த நாட்டின் உற்பத்தி அதிகரித்தது. அதே நேரத்தில், சுற்றுலாத்துறையும் வளர்ச்சியடைந்தது. இவற்றுக்கு மத்தியில் 08 பில்லியன் டொலர் நிவாரணத்தையும் பெற்றுக் கொண்டு கடன் சுமையிலிருந்து விடுபடுவதற்கான வழியை உருவாக்கியுள்ளோம்.
பொருளாதார வீழ்ச்சி சாதாரண மக்களையே பெருளவில் பாதிக்கிறது. ஆனால் பொருளாதார வளர்ச்சியின் இலாபத்தை ஒரு தரப்பு மாத்திரம் அனுபவிக்கிறது.
நாம் நாட்டு மக்களுக்கு தேவையான சகல நிவாரணங்களையும் வழங்குகிறோம். நாடும் முன்னேற்றம் கண்டு வருகிறது.
மேலும், தற்போது உதவித்தொகை கிடைக்கவுள்ளதால், அதிவேக நெடுஞ்சாலைகள் அமைக்கும் பணி ஆரம்பிக்கப்படவுள்ளது. ஏனைய வீதி நிர்மாண பணிகளும் ஆரம்பிக்கப்படவுள்ளன. மேலும் இந்த மாகாணத்திற்கு புதிய பல்கலைக்கழகம் ஒன்றும் கிடைக்கும். இதனால் அடுத்த சில வருடங்களில் குருணாகல் பெரும் அபிவிருத்தி அடையும்” எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.