தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவிற்கும் இலங்கைக்கான இஸ்ரேலிய தூதுவர் நவோர் கிலோனுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (04) தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சில் இடம்பெற்றது.
இலங்கையர்களுக்கான இஸ்ரேலின் வேலை வாய்ப்புகள் மற்றும் தற்போது இஸ்ரேலில் பணிபுரியும் இலங்கையர்களின் நிலைமை குறித்து கலந்துரையாடப்பட்டது.
இஸ்ரேலுக்குச் சென்ற சில இலங்கையர்களின் நடத்தை மற்றும் முறையற்ற செயற்பாடுகள் காரணமாக ஏற்பட்ட பிரச்சினைகளினால் இஸ்ரேலில் உள்ள விவசாய தொழில் முயற்சியாளர்கள் தற்போது இலங்கை தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவதில் தயக்கம் காட்டுகின்றனர்.
இஸ்ரேலில் உள்ள சில இலங்கைத் தொழிலாளர்கள் இலங்கைப் போராட்டங்களைப் போன்று போராட்டங்களில் ஈடுபடத் தொடங்கியதால் இந்த நிலை ஏற்பட்டதாக அமைச்சர் மனுஷ நாணயக்கார எடுத்து காட்டினார்.
இதற்கான தீர்வாக இஸ்ரேலிய விவசாய தொழில் முயற்சியாளர்களை இலங்கைக்கு வரவழைத்து பொருத்தமான நபர்களை அவர்களுடன் கலந்தாலோசிக்க ஒரு வேலைத்திட்டம் திட்டமிடப்பட்டுள்ளது.
அடிப்படை ஆவணங்களை கொண்டுள்ளவர்கள் இஸ்ரேலிய முதலிட்டாளர்களால் குழுக்கள் முறை மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட தொழிலாளர்கள் பரிசீலிக்கப்படுவார்கள் என அமைச்சர் குறிப்பிட்டார்.
தேர்ந்தெடுக்கப்பட்ட எட்டாயிரம் பணியாளர்கள் அனுப்பிய பிறகு புதிய தொழிலாளர்கள் இஸ்ரேலுக்குச் செல்ல வாய்ப்பு கிடைக்கும்.
கடந்த காலங்களில் இஸ்ரேலுக்குச் சென்ற சில தொழிலாளர்களின் பொறுப்பற்ற நடத்தை காரணமாக இஸ்ரேலிய வேலைகள் தற்போது நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாக அமைச்சர் நாணயக்கார தெரிவித்தார்.
இஸ்ரேலில் பணிக்குச் சென்ற தொழிலாளர்களின் முறையற்ற நடத்தைக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும், தேவைப்பட்டால் அந்த தொழிலாளர்களை மீண்டும் இலங்கைக்கு அழைக்கவும் தயங்கமாட்டேன் என அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.