எதிர்காலத்தில் இணையவழி முறையில் ஆசிரியர் இடமாற்றம் மற்றும் பதவி உயர்வு வழங்குவது தொடர்பில் கல்வி அமைச்சருடன் கலந்துரையாடியதாகத் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கல்வி நிர்வாக சேவை உத்தியோகத்தர்களுக்கான நியமனங்கள் மற்றும் டிப்ளோமாதாரிகளுக்கான ஆசிரியர் நியமனங்கள் வழங்கும் நிகழ்வில் உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
பதவி உயர்வு அல்லது ஆசிரியர் இடமாற்றம் தொடர்பில் எவருக்கும் அநீதி இழைக்க இடமளிக்கப்பட மாட்டாது எனவும் வலியுறுத்தினார்.
ஆசிரியர் இடமாற்றல் முறையை கணினி மூலம் செய்யலாமா என்பது குறித்து அமைச்சரிடம் நேற்று கலந்துரையாடினேன். பதவி உயர்வு அல்லது ஆசிரியர்கள் தொடர்பில் யாருக்கும் அநீதி இழைக்க அனுமதிக்க முடியாது. அதேபோன்று, இதற்குப் பின்னர் இவ்விடயம் தொடர்பில் கடுமையாக செயல்பட வேண்டியேற்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். சிலருக்கு என் மீது கோபம் ஏற்படலாம். ஆனால் அதுதான் யதார்த்தம். நாம் நமது பிள்ளைகளுக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.