வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதி இன்று (02) பாராளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை வெளியிட உள்ளார்.
இதன்படி இன்று நடைபெறவிருந்த பிரேரணை தொடர்பான விவாதம் அல்லது வாக்கெடுப்பு நடத்தப்படுவதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நேற்று (01) பிற்பகல் பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் பிரதமர் தினேஷ் குணவர்தனவின் பங்கேற்புடன் நடைபெற்றது.
இதேவேளை, அரசாங்கத்தினால் கைச்சாத்திடப்பட்டுள்ள உடன்படிக்கைகள் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட மாட்டாது என நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
மூன்று ஒப்பந்தங்களில் ஒன்று இன்னும் கைச்சாத்திடப்படாததே காரணம் என்கிறார்.
மேலும் கருத்துத் தெரிவித்த லக்ஷ்மன் கிரியெல்ல, மூன்று ஒப்பந்தங்களிலும் கைச்சாத்திடாமல், விவாதம் நடத்துவதில் அர்த்தமில்லை எனத் தெரிவித்திருந்தார்..
அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,
“முந்தைய கட்சித் தலைவர் கூட்டத்தில், இந்த மூன்று ஒப்பந்தங்களும் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது. அதில் கையொப்பமிட்டு அமைச்சரவையில் சமர்பிப்பேன் என்றார். அதை நிதிக்குழுவிடம் முன்வைப்பேன் என்றார். அதைக்கூட செய்யவில்லை.”
“ஜனாதிபதி உரைக்குப் பிறகு நாடாளுமன்றம் நாளை ஒத்திவைக்கப்படும். விவாதம் நடக்காது” என்றார்.
மறைந்த முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தனின் பூதவுடல் ஜூலை 03ஆம் திகதி இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக நாடாளுமன்ற வளாகத்திற்கு கொண்டு வரப்பட உள்ளது.
அதன் காரணமாக அன்றைய தினம் நாடாளுமன்றக் கூட்டத்தை நடத்த வேண்டாம் என நாடாளுமன்ற விவகாரக் குழு இணக்கம் தெரிவித்ததாக நாடாளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.