நெற் பயிச்செய்கைக்குத் தேவையான MOP உரத்தை அடுத்த இரண்டு பெரும் போகங்களுக்கு விவசாயிகளுக்கு இலவசமாக வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக கமத்தொழில் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் மஹிந்த அமரவீர இதனைத் தெரிவித்தார்.
2024 ஆம் ஆண்டில் அரிசி உற்பத்தி செய்ய, அவசியமான தேசிய நெல் தேவை 4.1 மில்லியன் மெட்ரிக் டொன் ஆகும். 2023 இல் மொத்த நெல் உற்பத்தி 4.5 மில்லியன் மெட்ரிக் டொன் ஆகும். அடுத்த 05 போகங்களில் இந்நாட்டில் நெற்பயிர்ச் செய்கையை இரட்டிப்பாக்குவதே எமது இலக்காகும். இந்த இலக்கை அடைய, நெல் விளைச்சளுக்கான தொழில்நுட்ப பெகேஜ் ஒன்றை அறிமுகப்படுத்தவுள்ளோம் என்று அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.
நெற் பயிர்ச்செய்கையின் உற்பத்தித்திறனை அதிகரிக்கும் வகையில், பல்வேறு பிரதேசங்களில் ஒரு இலட்சம் ஹெக்டெயார்களை தேர்ந்தெடுத்து நெல் விளைச்சலை அதிகரிக்க சிறப்புத் திட்டங்களை செயல்படுத்தவுள்ளோம். கடந்த சில ஆண்டுகளாக காலநிலைப் பாதிப்பு காரணமாக பயிர் சேதமும் அதிகரித்துள்ளது.
மேலும், இந்நாட்டிற்குத் தேவையான மொத்த முட்டை மற்றும் பால் உற்பத்தியில் இன்னும் நம்மால் தன்னிறைவு அடைய முடியவில்லை. 2021 உரப் பிரச்சினையால் கால்நடைத் தீவனமாக சோளம் உற்பத்தி குறைந்ததால் கோழி வளர்ப்பு மற்றும் கால்நடை வளர்ப்பு பாதிக்கப்பட்டது. நமது தேசிய சோளத் தேவை 06 இலட்சம் மெட்ரிக் டொன்கள் ஆகும். 2023 பெரும் போகத்தில் சோள விளைச்சல் 221,249 மெட்ரிக் டொன்களாக அதிகரித்துள்ளது.