இன்றும் நாட்டு மக்கள் ஏமாற்றப்பட்டு, ஒட்டுமொத்த நாடும் பொய்களால் வஞ்சிக்கப்பட்டு வருகிறது. கண்துடைப்பு நாடகமே அரங்கேற்றப்பட்டு வருவதை அவதானிக்க முடிகிறது. ஆஸ்கார் விருதை விட மேலான விருதுகள் இதற்கு வழங்கப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
365 நாட்களும் 24 மணி நேரமும் பொய் சொல்வதையே வழக்கமாகவும், தொழிலாகவும் கொண்டு மக்களை ஏமாற்றும் இவ்வேளை, கோயபல்ஸ் கோட்பாடு நாட்டில் முறையாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இல்லாத ஒன்றை இருப்பதாக சொல்லி, இருக்கும் ஒன்றை இல்லையென்றுச் சொல்லி, பொய்யை உண்மையாக்கி, உண்மையைப் பொய்யாக்கும் செயல்பாடு முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறான மாயையான பயணத்தில் நாட்டை கட்டியெழுப்ப முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
ஹிட்லரின் கோயபல்ஸ் ஆட்சியில் பொய்களை திரும்பத் திரும்பச் சொல்லி பொய்யை உண்மையாக்கினர். இத்தகைய கோட்பாடு இன்றும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. நாட்டை கட்டியெழுப்ப வேண்டுமானால், நாட்டின் உண்மை நிலையை நாம் புரிந்து கொள்ள வேண்டும். கசப்பான உண்மையை இந்நாட்டு மக்களுக்குச் சொல்ல வேண்டும். எமது நாடு 92 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான கடனில் சிக்கித் தவிக்கிறது. இந்த கடன் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கடன்களைக் கொண்டுள்ளது. இந்த கடன் தொடர்பில் அறியும் உரிமை மக்களுக்கு இருக்கிறது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 262 ஆவது கட்டமாக 1,177,000 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள், கம்பஹா, பியகம, பமுனுவில மகா வித்தியாலயத்திற்கு வழங்கி வைக்கும் நிகழ்வு ஜூன் 26 ஆம் திகதி இடம்பெற்றது.