நீதிமன்றத்தை அவமதித்ததாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை பரிசீலிக்க நீதிமன்றம் திகதிகளை வழங்கியுள்ளது.
இந்த மனு ஆகஸ்ட் 5ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பான மனு வெலிகம மாநகர சபையின் தலைவர் ரெஹான் ஜயவிக்ரமவினால் முன்வைக்கப்பட்டது.
டயானா கமகே ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்த கருத்துக்களால் நீதிமன்றத்தை அவமதித்ததாகக் கூறி அவருக்கு எதிராக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இராஜாங்க அமைச்சராகப் பணியாற்றிய டயானா கமகே, இந்நாட்டின் பாராளுமன்றத்தில் அமரக்கூடிய சட்டத் தகைமை எதுவும் கிடையாது என உயர் நீதிமன்றம் அண்மையில் அறிவித்திருந்தது.
இதேவேளை, முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே வெளிநாடு செல்வதற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் தடை உத்தரவு ஒன்றையும் பிறப்பித்திருந்தது.
இவ்வாறானதொரு பின்னணியில் ஊடகவியலாளர் டயானா கமகே இறுதியாக நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில்;
“எனது அரசியல் பயணம் இத்துடன் நிற்காது. வெகு காலத்திற்குள் இந்த பாராளுமன்றம் கலைக்கப்படும். எதிர்காலத்தில் நான் கண்டிப்பாக அரசியலுக்கு வருவேன். நான் எப்போதும் ஜனாதிபதியை ஆதரிப்பேன். நான் மீண்டும் நாடாளுமன்றத்திற்கு வருவேன்” எனவும் தெரிவித்திருந்தார்.
அவ்வாறு இருக்க அண்மைய காலமாக டயானா கமகே அமைதியாகவே இருக்கிறார். பொதுவெளியில் ஊடக சந்திப்புக்கள் கூட எதுவும் நடத்தப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.