இலங்கையின் அரசியல் வரலாற்றில் பெண் உரிமைகள், பெண்களுக்கான சம அந்தஸ்து தொடர்பான எந்தவொரு சட்டமூலமும் கொண்டு வரவில்லை என மகளிர் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்தார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அறிவுறுத்தலுக்கமைய பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட பெண்கள் வலுவூட்டலுக்கான சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (25) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே மகளிர் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க இதனைத் தெரிவித்தார்.
”பெண்கள் வலுவூட்டல் சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இலங்கையின் அரசியல் வரலாற்றில், பெண்களின் உரிமைகள் அல்லது பெண்களுக்கு சம அந்தஸ்த்து வழங்குவதற்கான எந்த சட்டமும் கொண்டு வரப்படவில்லை. இந்தச் சட்டத்தின் மூலம், பெண்களை வலுவூட்டுவதற்கான ஏற்பாடுகளைச் செய்வதற்காக, பெண்களின் முன்னேற்றத்திற்கான ஒரு தேசியக் கொள்கை தயாரிக்கப்படும் என அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்தார்.
இந்த சட்டம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் எண்ணக்கருவுக்கமைய கொண்டுவரப்பட்டுள்ளது. சட்ட வரைவின் போது பல திருத்தங்கள் செய்யப்பட்டன. பாராளுமன்ற மகளிர் மன்றமும் அதற்கான பரிந்துரைகளை வழங்கியது. அதன்படி, சட்டத்தில் பல அத்தியாவசிய மற்றும் முக்கியமான விடயங்களைச் சேர்த்துக்கொள்ள முடிந்தது.
மேலும், தேசிய பெண்கள் ஆணைக்குழுவை அமைத்தல் மற்றும் பெண்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான பொறிமுறையை நிறுவுதல் உள்ளிட்ட விடயங்களோடு, பெண்களின் உரிமை மீறல்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்வதற்கான வாய்ப்பும் உள்ளது. எனவே, இந்த சட்டம் பெண்களை வலுவூட்டுவதாக அமைந்துள்ளது.
பெண்களுக்கு எதிரான அனைத்து வகையான பாகுபாடுகளையும் கலைவதற்கான இணக்கப்பாட்டிற்கு அமைவாக அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ள பொறுப்புக்களைச் செயற்படுத்தும் பொறிமுறையொன்றை அறிமுகப்படுத்த வேண்டும். இதனால் பாலினம் மற்றும் பாலியல் அடிப்படையிலான பாகுபாட்டிலிருந்து பாதுகாப்பதற்கும், துன்புறுத்தல்களைத் தடுப்பதற்குமான ஏற்பாடுகளையும் செய்ய முடியும்.” என்று அமைச்சர் தெரிவித்தார்.