இந்த ஆண்டு 990,000 இற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் எமது நாட்டிற்கு வருகை தந்துள்ளனர் என்று சுற்றுலாத்துறை, காணி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரங்கள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.
இலவச விசா வழங்கும் முறை குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையும் விரைவில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாகவும் அதன்பிறகு இலவச விசா வழங்கும் முறையை அமுல்படுத்த எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.
இதன் மூலம் சுற்றுலாத்துறையின் விரைவான வளர்ச்சியை ஏற்படுத்த முடியும். சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் இதுவரை 05 உலகளாவிய விளம்பரத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
சீனா, ஜப்பான், இந்தியா மற்றும் ஐரோப்பாவிற்கு தனித்தனியான உலகளாவிய விளம்பர திட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளன. சுற்றுலாப் பயணிகள் மத்தியில் இலங்கையை பிரபலப்படுத்த “Must Visit“ பெயரில் புதிய வேலைத்திட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சுற்றுலா அமைச்சினால் மேற்கொள்ளப்பட்டு வரும் ஊக்குவிப்புத் திட்டங்களின் காரணமாக, உலகின் முதல் பத்து சுற்றுலாத் தலங்களுக்குள் இலங்கையையும் கொண்டு வர முடிந்துள்ளது.
இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளில் 33% பேர் மீண்டும் இலங்கைக்கு வருகை தருகின்றனர். அந்தச் சூழல் சுற்றுலாத் துறையின் ஒரு நல்ல போக்காகும். எனவே, கடல்சார் சுற்றுலாத் துறையை மேம்படுத்தவும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
அதேநேரம் திருகோணமலை மற்றும் அறுகம்பே பகுதிகள் கடல்சார் சுற்றுலாத் துறையின் கேந்திர மையமாக மாற்றவும் திட்டமிடப்பட்டுள்ளது. சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் வகையில் விரைவில் உள்நாட்டு விமான சேவையொன்றை ஆரம்பிக்கவும் எதிர்பார்க்கப்படுகிறது.