நாம் நிறைய சுற்றுலாவிற்கு செல்லும் போது இந்த ஒரு விஷயம் மட்டும் நமக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தும். காட்டிற்குள் சவாரி செய்யும் போது சுற்றிலும் சிங்கங்கள் இருக்கும், ஆனால் அது சவாரி வாகனங்களை தாக்குவதில்லை. ஏன் தெரியுமா? வேட்டையாடி தன்னுடைய உணவைத் தேடித் திண்ணும் சிங்கங்கள் ஏன் சவாரி வாகனங்களை தாக்குவதில்லை என்றாவது யோசித்து இருக்கீங்களா?
வேட்டையாடுவதில்லை
காடுகளில் உள்ள பெரும்பாலான விலங்குகள் இயல்பாகவே மனிதர்களை ஆக்கிரமிப்பதில்லை. ஏனெனில் விலங்குகள் எப்பொழுதும் அவற்றின் முக்கிய முதன்மை உள்ளுணர்வாக உயிர் வாழ்தலில் கவனம் செலுத்துகின்றனர். உணவைக் கண்டுபிடிப்பது, தங்கள் வாழ்விடங்களை காப்பது, குழந்தைகளை பராமரிப்பது அதில் மட்டும் தான் விலங்குகள் கவனம் செலுத்துகின்றன. அவை மனிதர்களை தாக்குவதில்லை. மேலும் பல காட்டு விலங்குகள் மனித தொடர்புகளை தவிர்க்கவே விரும்புகின்றனர்.
சிங்கங்களுக்கு பழக்கமாகிவிட்டன
பல சவாரி வாகனங்கள் தினசரி சிங்கங்களுக்கு முன்னிலையில் வந்து போவதால் அவைகளுக்கு பழக்கமாகிவிட்டன. சிங்கங்கள் சவாரி வாகனங்களை அச்சுறுத்தலாக பார்க்கவில்லை. மனிதனால் தீங்கு இல்லை என நினைக்கும் போது அவை வேட்டையாட நினைப்பதில்லை. மேலும் சவாரி ஓட்டுநர், விலங்கு பாதுகாவலர்கள் உங்களுடன் இருப்பார்கள்.
சவாரி வாகனத்தில் உள்ள அனைவரையும் விலங்குகள் தனித்தனியாக பார்ப்பதில்லை. இதுவே சிங்கங்கள் சவாரி வாகனங்களை தாக்காமல் இருப்பதற்கு காரணமாக கூறப்படுகிறது. இருப்பினும் நீங்கள் காட்டு விலங்குகளுடன் சவாரி செய்யும் போது சில அடிப்படை வழிமுறைகளை பின்பற்ற வேண்டியது அவசியம்.
ஆக்ரோஷமானது கிடையாது
விலங்குகள் சரணாலயத்தில் இருக்கும் விலங்குகள் பொதுவாக ஆக்ரோஷமானது கிடையாது. அவை வேட்டையாடுவதில்லை. மேலும் சுற்றுலாப் பயணிகளுக்காக நிறைய முன்னேற்பாடுகளையும் அவர்கள் செய்து இருப்பார்கள். முதன் முதலில் இந்த சவாரியை தொடங்குவதற்கு முன்பு விலங்குகளின் நடத்தை கண்காணிக்கப்படுகிறது. சவாரி வாகனங்களை அவற்றின் அருகில் ஓட்டிச் சென்று சிங்கங்களின் நடத்தையை அவர்கள் கண்காணிப்பார்கள்.
சரணாலயத்தில் புதியதாக சவாரி தொடங்கும் போது விலங்குகள் முதல் முறையாக ஆக்ரோஷமாக இருக்கலாம். ஆனால் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு சவாரி வாகனங்கள் மற்றும் அதில் பயணிக்கும் மக்களுடன் அது பழக்கமாகிவிடும். அதன் பிறகு சவாரி வாகனங்களையும், அதன் உள்ளே இருக்கும் மக்களையும் விலங்குகள் உணவாக பார்ப்பதில்லை. இதனால் விலங்குகள் சவாரி வாகனங்களை தாக்குவதில்லை.
சிங்கங்கள் மனிதர்களை இரையாக பார்ப்பதில்லை
பொதுவாக சிங்கங்கள் மனிதர்களை இரையாக பார்ப்பதில்லை. ஆனால் ஒரு மனிதன் மட்டும் தனியாக சென்றாலோ அல்லது ஓடினாலோ அப்பொழுது சிங்கங்கள் தாக்க வாய்ப்பு உள்ளது. மேலும் காயமடைந்த அல்லது வயதான சிங்கங்கள் பகுத்தறிவற்ற முறையில் நடந்து கொள்ள வாய்ப்பு உள்ளது. ஏனெனில் வயதான காலத்தில் அவைகளுக்கு உணவு கிடைப்பது கடினம். இதனால் அந்த விலங்குகள் எளிதாக மனிதர்களை உணவாக நினைத்து வேட்டையாட வாய்ப்பு இருக்கிறது.
வாகனங்கள் அவற்றிற்கு ஒரு அச்சுறுத்தல்
சவாரி வாகனங்கள் எப்பொழுதும் பெரிய அளவில் காணப்படும். 4 சக்கரங்களை கொண்ட ஜீப் வகைகள் எப்பொழுதும் சிங்கங்களுக்கு ஒரு பெரிய அச்சுறுத்தலாகவே இருக்கும். காரணம் சவாரி வாகனங்கள் சிங்கத்தை விட பெரியவை. எனவே சிங்கங்கள் சவாரி வாகனங்களை ஒரு அச்சுறுத்தலாகவே நினைக்கின்றன.
வழிகாட்டி சொல்வதை கேட்க வேண்டும்
சவாரி வாகனங்களில் பயணம் செய்யும் போது வழிகாட்டுபவர் சொல்வதை கேட்க வேண்டும். வழிகாட்டியின் கட்டளைக்கு கீழ்ப்படிவது மிகவும் அவசியம். சில சமயங்களில் அமைதியாக இருக்க சொல்லலாம். நிற்க கூடாது போன்ற கட்டளைகளை அவர் பிறப்பிக்கலாம் அதை அப்படியே பின்பற்ற வேண்டியது அவசியம். உங்கள் செயல்கள் விலங்குகளை தொந்தரவு செய்யக் கூடாது, விலங்குகளின் இயல்பான நடத்தைக்கு இடையூறு விளைவிக்க கூடாது. இது போன்ற விஷயங்களை வழிகாட்டி சொன்னால் கேட்க வேண்டியது அவசியம் ஆகும்.
வன விலங்குகளுக்கு இடையூறு செய்யாதீர்கள்
காட்டு விலங்குகளுக்கிடையே சவாரி செய்யும் போது எக்காரணம் கொண்டும் கீழே இறங்க கூடாது. வாகனத்திற்குள்ளே இருக்க வேண்டும். விலங்குகளின் செயல்களுக்கு எந்த இடையூறும் கொடுக்க கூடாது. விலங்குகளிடம் விளையாடக் கூடாது. உரக்கமாக சத்தம் போடுதல், கை தட்டுதல் மற்றும் பொருட்களை விலங்குகளின் மீது தூக்கி போடுதல் போன்றவற்றை செய்யக் கூடாது. உங்கள் கைகளையும் கால்களையும் ஒரு போதும் வாகனத்திற்கு வெளியே நீட்டக் கூடாது. எக்காரணம் கொண்டும் அவற்றை தொட முயற்சிக்க கூடாது.