காஸா பகுதியில் இடம்பெற்று வரும் மோதல்கள் தொடர்பில் இலங்கையின் நிலைப்பாடு ஒருபோதும் மாறாது எனவும், 05 வருடங்களுக்குள் பலஸ்தீன அரசை ஸ்தாபிக்க வேண்டும் என்பதே இலங்கையின் நிலைப்பாடு எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
காஸாவில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக புதிய காத்தான்குடி பெரிய ஜும்மா பள்ளிவாசலில் இன்று (23) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட பிரார்த்தனையில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரையின் பேரில் புதிய காத்தான்குடி பெரிய ஜும்மா பள்ளிவாசல் காஸா சிறுவர் நிதியத்திற்கு (Children of Gaza Fund) நிவாரணம் வழங்குவதற்காக ஸ்தாபிக்கப்பட்ட ஒரு கோடியே எழுநூற்று அறுபத்து ஒன்பதாயிரத்து நானூற்று பதினேழு ரூபாவை நன்கொடையாக வழங்கியது தொடர்பான காசோலையானது ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.