கழுதைப்பாலில் இருந்து சீஸ் (Cheese) உள்ளிட்ட சத்தான உணவு மற்றும் தோல் நோய்களுக்கான மருந்துகளை உற்பத்தி செய்வதற்கான சாத்தியக்கூறுகளை கண்டறியும் ஆய்வுகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பேராதனைப் பல்கலைக்கழகத்தின் கால்நடை மருத்துவ பீடம், விஞ்ஞான பீடம் மற்றும் மருத்துவ பீடம் என்பன இணைந்து இந்த ஆய்வுகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
கிளியோபாட்ரா போன்ற அழகிகள் தங்கள் அழகை மேம்படுத்த கழுதைப்பாலை பயன்படுத்தியதாக வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், அந்த பாலை அடிப்படையாகக் கொண்டு வாதநோய்களை தடுக்கும் தைலங்களை தயாரிப்பதற்கான சாத்தியக்கூறுகளை மருத்துவ பீடத்தை தொடர்பு கொண்டு ஆராய திட்டமிட்டுள்ளதாகவும் சிரேஷ்ட பேராசிரியர் கலாநிதி அசோக தங்கொல்ல ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
கழுதைப்பாலின் ஊட்டச்சத்து தாய்ப்பாலைப் போன்றே உள்ளது என்றும் அதனைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் பாலாடைக்கட்டிக்கு உலகில் அதிக தேவை உள்ளது என்றும் அவர் வலியுறுத்தினார்.
பேராதனை பல்கலைக்கழக கால்நடை மருத்துவ பீடத்திற்கு கொண்டு வரப்பட்ட நன்கு வளர்ந்த கழுதை ஒரு நாளைக்கு சுமார் 5 கிலோ புல் சாப்பிடுவதாகவும், அவற்றிலிருந்து தினசரி பெறக்கூடிய பாலின் அளவு ஒரு மாட்டிடமிருந்து பெறப்பட்டும் பாலின் அளவைவிட மிகக் குறைவு என்றும் பேராசிரியர் கூறினார்.
கழுதைப்பாலை அடிப்படையாக கொண்டு பொருட்களை உற்பத்தி செய்வதற்கான ஆராய்ச்சிகள் நடைபெற்று வரும் இந்த நேரத்தில் இந்த தொன்மையான கழுதைகளை பாதுகாக்க ஒரு குறிப்பிட்ட திட்டம் தேவை என விலங்குகள் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகள் கருத்து தெரிவித்துள்ளன.
மேலும், சில பாதுகாப்புத் திட்டத்தை செயல்படுத்தாவிட்டால், இன்னும் பல ஆண்டுகளில் கழுதைகள் அழிந்துவிடும் எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.