எதிர்காலத்திற்கு ஏற்ற, தெற்காசியாவின் சிறந்த கல்வி முறையை இந்நாட்டில் உருவாக்குவதற்கான பணிகள் முன்னெடுக்கப்பபட்டு வருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
சிலாபம், கிரிமெட்டியான பௌத்த மகளிர் தேசிய பாடசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுவரும் மூன்று மாடிக் கட்டடத்தின் முதற்கட்டக் கட்டடத்தை இன்று (14) மாணவர்களிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.
நாட்டை அபிவிருத்தி செய்வதே அரசாங்கத்தின் பொறுப்பு என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டியதுடன், கோஷங்களை எழுப்பி காலத்தைக் கடத்தும் காலம் இதுவல்ல என்றும் வலியுறுத்தினார்.
நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு புதிய பாதையில் செல்ல வேண்டும் எனவும், அதற்குத் தேவையான பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்தி நாட்டில் விரைவான அபிவிருத்தியை ஏற்படுத்த அரசாங்கம் முன்வைக்கும் வேலைத்திட்டத்துடன் அனைவரும் கைகோர்க்க வேண்டுமெனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
கடினமான பொருளாதார சூழ்நிலையிலும், நாட்டின் பிள்ளைகளுக்கு நவீன கல்வியை வழங்க அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றது. கடந்த கால கல்வி முறைகள் பற்றி தற்போது பேசுவதில் அர்த்தமில்லை. எதிர்காலத்தைப் பார்த்து, தெற்காசியாவில் சிறந்த கல்வி முறையை இந்நாட்டில் உருவாக்க வேண்டும். நமது நாட்டின் பலம் கல்விதான். நம் நாட்டில் எப்பொழுதும் சிறந்த கல்வி முறை உள்ளது. கடந்த காலங்களில் கல்விக்காக இயன்றளவு நிதி ஒதுக்கீடுகளை வழங்கினோம்.
நாம் புதிதாக சிந்திக்க வேண்டும். கல்வியில் புதிய தொழில்நுட்பத்தை உள்ளீர்ப்பதற்கான முயற்சிகளை முன்னெடுத்து வருகிறோம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.