அனைத்துப் பிரஜைகளின் வாழ்க்கைத் தரத்தை உறுதி செய்வதுடன், முழு நாட்டையும் துரித அபிவிருத்தியை நோக்கி இட்டுச் செல்லும் இலக்குகளை அடைய அர்ப்பணிப்புடன் செயல்படுவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
அந்த இலக்குகளை அடைவதற்காக அரசியலமைப்பிற்குள் இருந்து செயற்படும் வகையில் பொருளாதார மாற்ற சட்டத்தில் அதனை உள்ளடக்கியுள்ளதாகவும் குறிப்பிட்ட ஜனாதிபதி, எனவே அரசியலமைப்பிற்கு புறம்பாக செயற்படுவதாக எவரும் குற்றம் சுமத்த முடியாது எனவும் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், நாட்டில் தற்போதுள்ள ஜனநாயக சோசலிசக் கோட்பாடுகளிலிருந்து தாம் ஒருபோதும் விலகவில்லை என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் இன்று (13) ஆரம்பமான சார்க் நாடுகளின் மத்திய வங்கி ஆளுநர்களின் “SAARCFINANCE” மாநாட்டின் ஆரம்ப அமர்வில் பிரதான உரையை ஆற்றிய போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பிராந்தியத்தில் பல நாடுகளில் தேர்தல்கள் முடிந்து புதிய அரசாங்கங்கள் நிறுவப்பட்டுள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி, இலங்கையும் தேர்தலை நடத்த தயாராவதாகவும் குறிப்பிட்டார்.
வழமை போன்று ஐந்து வருடத்திற்கு ஒரு தடவை அரசாங்கத்தை மாற்ற முயற்சிப்பதா அல்லது நாட்டை வெற்றி பெறச் செய்வதா என்பதை இந்தத் தேர்தலில் மக்கள் தீர்மானிக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதில் இலங்கையின் செயற்பாடுகள் வலுவாக உள்ளதாக சர்வதேச நாணய நிதியம் கூறியுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்தார்.
2023 டிசம்பர் மாத இறுதியில் சமூக நலன்புரி செலவுகள் தவிர சகல இலக்குகளையும் இலங்கை நடைமுறைப்படுத்தி இருப்பதாகவும் 2024 ஏப்ரல் மாத இறுதியில் அநேகமான இலக்குகள் தாமதத்துடனேனும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் குறிப்பிட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
இந்த நெருக்கடியில் இருந்து இலங்கை இவ்வளவு துரிதமாக மீண்டு வரும் என்று பலர் நினைக்காத நேரத்தில், எதிர்பார்த்ததை விட இந்த நிலைமை சிறப்பாக இருப்பதாகத் தெரிவித்த ஜனாதிபதி, இந்த பெறுபேறுகளை அடைய தன்னுடன் நம்பிக்கையுடன் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
“உலகளாவிய பொருளாதார சவால்களுக்கு மத்தியில் மத்திய வங்கிகளின் செயற்பாடுகள்” எனும் தொனிப்பொருளில் 45ஆவது முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த மாநாடு இரண்டு நாட்கள் நடைபெறவுள்ளது.