புதிய கொவிட் திரிபு வேகமாக பரவ ஆரம்பித்துள்ள நிலையில், வெளிநாட்டவர்களுக்கு தமது எல்லைகளைத் திறக்காதிருப்பதற்கு அவுஸ்திரேலியா தீர்மானித்துள்ளது.
கொவிட் தடுப்பூசி பெற்றுக்கொண்ட வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் அவுஸ்திரேலிய வீசாவுடன் வெளிநாடுகளில் தங்கியிருப்போருக்கு இன்று முதல் (டிசம்பர் 1) எல்லைகளைத் திறப்பதாக அவுஸ்திரேலியா ஏற்கனவே அறிவித்திருந்தது.
எனினும், புதிய திரிபான ஒமிக்ரோன் வைரஸ் தொற்றுள்ள ஐந்து பேர் அவுஸ்திரேலியாவில் அடையாளம் காணப்பட்டுள்ளதால் எல்லைகளைத் திறக்காதிருப்பதற்கு அவுஸ்திரேலிய தீர்மானித்துள்ளது.
புதிய திரிபு ஒமிக்ரோன் வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதால் எல்லைகளை மீளத் திறக்கும் தீர்மானத்தை, குறைந்தது 15 நாட்களுக்குத் தாமதப்படுத்த வேண்டும் என்று அவுஸ்திரேலியப் பிரதமர் ஸ்கொட் மொரிசன் தெரிவித்துள்ளார்.
ஆபிரிக்காவில் முதன்முறையாக கண்டறியப்பட்ட ஒமிக்ரோன் வைரஸ் திரிபு அதிக ஆபத்தை ஏற்படுத்தக் கூடியது என்ற உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளது. இந்த நிலையில், வெளிநாட்டவர் உள்நுழைய தடை விதிப்பதாக ஜப்பான் நேற்று அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.