டிசம்பர் 4ஆம், 5ஆம் திகதிகளில் அபுதாபியில் நடைபெறும் சர்வதேச மாநாட்டில் உரையாற்றுவதற்கு முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில், நாடுகளின் ஆளும் கட்சியினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், எதிர்க்கட்சியைச் சேர்ந்த முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கொவிட் பெருந்தொற்றுடன் இந்து சமுத்திரப் பிராந்தியம் நெருக்கடியான சூழ்நிலையில் இருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் சர்வதேச விவகாரங்களுக்கான முன்னாள் செயலாளர் சந்தித் சமரசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கை, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் பொருளாதார நிச்சயமற்ற நிலையை எதிர்கொண்டுள்ள நிலையில், இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் சீனா தனது அரசியல் மற்றும் பொருளாதார பிடியை இறுக்கி வருகிறது.
உச்சிமாநாட்டை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடுகளின் ஆளும் கட்சியின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் உச்சிமாநாட்டில் உரையாற்றவுள்ளனர். ஆனால் இலங்கை எதிர்க்கட்சித் தலைவரான முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மாத்திரமே இந்த மாநாட்டில் உரையாற்றவுள்ளார்.
இலங்கையின் முன்னாள் பிரதமருக்கு சர்வதேச இராஜதந்திரம் பற்றிய விரிவான அறிவு மற்றும் பிராந்தியத்திற்கான தூர நோக்கு ஆகியவற்றினால் மாநாட்டில் உரையாற்றுவதற்கு விசேட அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்தித் சமரசிங்க மேலும் தெரிவித்துள்ளார்..
ஆசியா மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளும் பேரழிவு, பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு வருவதை எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் நிலையில்,வார இறுதியில் நடைபெறும் பிராந்திய தலைவர்கள் மாநாட்டில், ரணில் விக்ரமசிங்கவின் நோக்கு மற்றும் திட்டம் ஆகியவை குறித்து பிராந்தியத் தலைவர்கள் உன்னிப்பாக கவனம் செலுத்துவார்கள் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் வெளியுறவுத்துறை செயலாளர் கூறியுள்ளார்.