All eyes on Rafah என்ற தொடர் இப்போது உலகெங்கும் உச்சரிக்கப்படும் தொடராக மாறியுள்ள நிலையில், இதற்கான காரணம் குறித்து நாம் பார்க்கலாம்.
All eyes on Rafah – இப்போது உலகெங்கும் உச்சரிக்கப்படும் ஒரு தொடர் இதுதான். பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக உலகின் பல்வேறு நாடுகளும் குரல் கொடுப்பதைக் குறிப்பதாகவே இந்தத் தொடர் இருக்கிறது.
இஸ்ரேல் காசா இடையே கடந்த பல மாதங்களாக மோதல் நடந்து வருவது அனைவருக்கும் தெரியும். காசாவில் உள்ள ஹமாஸை முழுமையாக அழிக்கும் வரை ஓயப்போவதில்லை என்று இஸ்ரேல் அறிவித்து இருந்தது. இதன் காரணமாக காசாவில் ஒவ்வொரு பகுதியிலும் இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தி வந்தது. ஏற்கனவே, வடக்கு காசாவில் தனது தாக்குதல்களை இஸ்ரேல் தீவிரப்படுத்திய நிலையில், அடுத்து தெற்கு காசாவில் உள்ள ரஃபா நகரில் தாக்குதல் நடத்தப் போவதாக அறிவித்தது.
இருப்பினும், ரஃபா என்பது பலஸ்தீன மக்கள் அதிகம் வாழும் நகரங்களில் ஒன்றாகும். காசாவின் ஒட்டுமொத்த மக்கள்தொகையில் சுமார் 50%, அதாவது 10 லட்சம் பேர் அங்கு இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த ரஃபா நகர் எகிப்து எல்லையை ஓட்டி அமைந்துள்ளது. அங்குப் பல அகதிகள் முகாம்களும் உள்ளன. இதனால் ரஃபாவில் தாக்குதல் நடத்தினால் அது பேரழிவைத் தரும் என்று உலக நாடுகள் எச்சரித்தன. அவ்வளவு என் அனைத்து விஷயங்களிலும் இஸ்ரேலுக்கு ஆதரவாக இருக்கும் அமெரிக்கா கூட ரஃபா மீது தாக்குதல் வேண்டாம் என்றே இஸ்ரேலை எச்சரித்தது.
அதேபோல சர்வதேச நீதிமன்றமும் காசா பிராந்தியத்தில் இஸ்ரேல் தனது ராணுவ நடவடிக்கைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என வலியுறுத்தியது. இருப்பினும், இந்த எச்சரிக்கைகளைப் புறந்தள்ளிவிட்டு இஸ்ரேல் ரஃபா மீது தாக்குதலைத் தொடங்கியது. கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகுதியில் ரஃபா மீது இஸ்ரேல் தாக்குதலை நடத்தியது. இஸ்ரேலின் ஏவுகணைகளில் ஒன்று ரஃபாவில் உள்ள புலம்பெயர்ந்த மக்களின் முகாமை தாக்கியது. இதில் 45 பேர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர். மேலும், 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்தச் சம்பவம் உலகெங்கும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஐநாவின் UNRWA அமைப்பு இந்த கொடூர தாக்குதல் குறித்து மிகவும் காட்டமான சில கருத்துகளைத் தெரிவித்துள்ளது. இது குறித்து அவர்கள் கூறுகையில், “பூமியில் உள்ள நரகமாக காசா மாறிவிட்டது. காசா மக்கள் தாக்குதலில் இருந்து தப்பித்துப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல முயல்கிறார்கள். ஆனால், துரதிஷ்டவசமாக காசாவில் பாதுகாப்பான இடம் என்றே ஒன்று இப்போது இல்லை” என்றார்.
முதலில் தெற்கு ரஃபா பகுதியில் நடந்த தாக்குதலில் ஹமாஸை சேர்ந்த இரு முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அறிவித்தது. இருப்பினும், இதற்கு உலகெங்கும் மிகப் பெரியளவில் எதிர்ப்பு கிளம்பியது. அகதிகள் முகாமில் தாக்குதல் நடத்திவிட்டு இஸ்ரேல் இப்படி அறிவிப்பதை ஏற்கவே முடியாது என உலக நாடுகள் கண்டனம் தெரிவித்தன.
இந்தச் சூழலில் தான், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் ரஃபா தாக்குதல் துரதிர்ஷ்டவசமானது என்றும் அது பெரிய தவறு தான் என்றும் கூறினார். பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படுத்தக் கூடாது என்று பல்வேறு முயற்சிகளை தாங்கள் எடுத்த போதிலும் அதையும் தாண்டி இந்த தவறு நடந்துவிட்டதாக அவர் வேதனை தெரிவித்தார். இருப்பினும், ஹமாஸை அழிக்கும் நடவடிக்கை தொடரும் என அவர் கூறியது கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இந்தத் தாக்குதலைத் தொடர்ந்தே All eyes on Rafah என்ற சொற்றொடர் இணையத்தில் பரவ தொடங்கியுள்ளன. shahv4012 என்ற இன்ஸ்டா யூசர் முதலில் இந்த போஸ்டரை பகிர்ந்தார். ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட அந்த போஸ்டரில் All eyes on Rafah என்ற சொற்றொடர் முதலில் இடம்பெற்றிருந்தது. உலக சுகாசார அமைப்பின் காசாவுக்கான பிரதிநிதியான ரிச்சர்ட் பீபர்கார்ன் என்பவர் All eyes were on what is happening in Rafah என்று கூறியிருந்த நிலையில், அதில் இருந்த இந்த All eyes on Rafah என்ற சொற்றொடர் உருவாகி இருக்கும் என்று கூறப்படுகிறது.