அரசியலமைப்பில் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டாலும், மது, போதைப்பொருள் மற்றும் சிகரெட் போன்றவற்றை ஊக்குவிக்கும் ஒரு யுகம் தற்போது உருவாக்கப்பட்டுள்ளது.
இது ஒரு மோசமான மற்றும் ஒழுக்கக்கேடான சமூகத்தை உருவாக்க வழிவகுக்கிறது. தனிப்பட்ட இலாப நோக்கத்திற்காக மதுபான மற்றும் மதுபானசாலைகளுக்கான அனுமதிப் பத்திரங்கள் வெவ்வேறு விலையில் விற்கப்படுகின்றன. இந்த விற்பனைக்கு 225 பாராளுமன்ற உறுப்பினர்களையும் பலிகடா ஆக்குவதற்கு பாரிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
இது போன்ற வெட்கக்கேடான செயல்கள் தற்போது பலம் வாய்ந்த பலரது ஆதரவுடன் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில் விகாரைகள், தேவாலயங்கள், கோவில்கள் மற்றும் பள்ளிகளுக்கு அருகில் மதுபானசாலைகளுக்கான அனுமதிப்பத்திரங்களை விநியோகிப்பது தவறானது.
மது குறைந்த மக்கள் சமூகத்தை உருவாக்கும் நோக்கத்துடன் செயல்பட்டு வரும் ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் அனைவரும் சட்டத்தின் முன் வர வேண்டிவரும். தேர்தலை முன்னிட்டு மதுபான அனுமதிப்பத்திரத்தை வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக எடுக்க முடியுமான அனைத்து சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
கொழும்பு, நாரஹேன்பிட்டி அபயாராமவில் நேற்று(17) இடம்பெற்ற பரிசளிப்பு விழா ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார்.