கிரிக்கெட் போட்டிகளில் ஆட்ட நிர்ணயம் சம்பவம் தொடர்பில் சந்தேகநபராக குறிப்பிடப்பட்டுள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் சசித்ர சேனாநாயக்கவின் விசாரணை தொடர்பான குரல் பரிசோதனை அறிக்கை இதுவரை கிடைக்கப்பெறவில்லை என விளையாட்டு ஊழல் தடுப்பு பிரிவு கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று (17) அறிவித்தது.
இது தொடர்பான முறைப்பாடு கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபரின் குரல் பரிசோதனை நடத்தப்பட்ட போதிலும், சோதனைக்கு பயன்படுத்தப்பட்ட இயந்திரம் பழுதடைந்துள்ளதால் அது தொடர்பான அறிக்கை இதுவரை கிடைக்கப்பெறவில்லை என விளையாட்டு ஊழல் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அப்போது சந்தேகநபர் சார்பில் ஆஜரான ஜனாதிபதியின் சட்டத்தரணி கலிங்க இந்ததிஸ்ஸ, கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் குரல் பரிசோதனை நடத்தப்பட்ட போதிலும், அறிக்கை இதுவரை கிடைக்கப்பெறாததன் மூலம் தனது கட்சிக்காரருக்கு அநீதி இழைக்கப்படுவதாக நீதிமன்றில் தெரியப்படுத்தினார்.
முன்வைக்கப்பட்ட உண்மைகளை பரிசீலித்த நீதவான், இந்த குரல் பரிசோதனை தொடர்பான அறிக்கையை உடனடியாக சமர்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு கூறியதுடன், அரச பகுப்பாய்வாளருக்கு நினைவூட்டல் அனுப்புமாறும் உத்தரவிட்டார்.
2019ஆம் ஆண்டு நடைபெற்ற எல்பிஎல் கிரிக்கெட் போட்டியில் ஆட்ட நிர்ணயம் செய்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட சசித்ர சேனாநாயக்க, தற்போது நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.