இஸ்ரேல் உடனான தற்காலிக போர் நிறுத்தத்துக்கு ஹமாஸ் ஒப்புதல் அளித்துள்ளது. எகிப்து மற்றும் கட்டார் நாடுகளின் சமரச பேச்சுவார்த்தையை தொடர்ந்து ஹமாஸ் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இஸ்ரேல் மீது கடந்த ஆண்டு அக்டோபர் 7ஆம் திகதி ஹமாஸ் அமைப்பானது தாக்குதல் நடத்தியதில் இஸ்ரேல் கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த தாக்குதலில் இஸ்ரேல் நாட்டில் பல உயிர்கள் பலியாகியதோடு, நூற்றுக்கணக்கானோரை பணயக் கைதிகளாக சிறை பிடித்தும் சென்றனர் ஹமாஸ் படையினர்.
போர்நிறுத்த ஒப்பந்தம் அடிப்படையில், அவர்களில் சிலரை இஸ்ரேல் மீட்டது. மீதமுள்ளவர்களையும் மீட்போம் எனக் கூறி வருகிறது. ஹமாஸ் அமைப்பை ஒழிக்கும் வரை ஓயமாட்டோம் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு சபதம் எடுத்துள்ளார். தொடர்ந்து காஸா மீது இஸ்ரேல் போரில் ஈடுபட்டு வருகிறது.
ஹமாஸ் அமைப்பின் பதுங்கு தளமான காஸா மீது இஸ்ரேல் வான்வழி, தரைவழி தாக்குதல்களை தொடர்ந்து நடத்தி வந்தது. இந்த தாக்குதல்களால் ஹமாஸ் படையினர் மட்டுமல்லாது ஏராளமான பலஸ்தீன பொதுமக்களும் பலியாகினர். பலர் அங்கிருந்து வெளியேறி ரfபா நகரில் தஞ்சமடைந்துள்ளனர்.
7 மாதங்களாக நடந்து வரும் போரில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் காஸா பகுதியில் உயிரிழந்து உள்ளனர். இந்த 7 மாத கால போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கு உலக நாடுகள் பெரும் முயற்சி மேற்கொண்டு வருகின்றன.
போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைக்கு உலக நாடுகள் முயற்சித்து வந்தாலும் இந்த பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்நிலையில், போர் நிறுத்த ஒப்பந்தம் ஒன்றை எகிப்து மற்றும் கட்டார் நாடுகள் இணைந்து முன்மொழிந்தன. இதனை ஹமாஸ் அமைப்பு ஏற்றுக் கொண்டுள்ளது. போர் நிறுத்தத்திற்கு தயார் என தெரிவித்து உள்ளது.
ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே, மத்தியஸ்தர்களான கட்டார் மற்றும் எகிப்துக்கு “போர்நிறுத்த ஒப்பந்தம் தொடர்பான அவர்களின் முன்மொழிவுக்கு ஹமாஸின் ஒப்புதலை” தெரிவித்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம், தற்காலிகமாக போர் நிறுத்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வரக்கூடும்.
காஸாவில் இருந்து இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் திரும்பப் பெறப்படுவதற்கு ஈடாக, ஹமாஸ் அமைப்பு பிடித்து வைத்திருக்கும் பணயக் கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இஸ்ரேலும், ஹமாஸின் நிபந்தனைகளை ஏற்க வேண்டும். அடுத்தடுத்த நாட்களில் இஸ்ரேலின் முடிவு தெரியவரும்.
முன்னதாக, போரை நிறுத்தினால் ஹமாஸ் மீண்டும் காஸாவில் தங்களை வலுப்படுத்திக் கொண்டு தாக்குதல் நடத்துவார்கள் என்றும், இஸ்ரேல் இராணுவத்தை காஸாவிலிருந்து திரும்ப பெறும் கோரிக்கையை ஏற்க முடியாது என்றும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.