ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் பொதுத் தேர்தலை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என ஜனாதிபதி தரப்பு பசில் ராஜபக்ஷ தரப்பிற்கு தெரிவித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் பசில் ராஜபக்ஷவிற்கும் இடையில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளன.
கலந்துரையாடப்பட்ட விடயங்களை மேற்கோள் காட்டி, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவாரா இல்லையா என்பது ஜூலை மாத நடுவாரத்தில் அறிவிக்கப்பட உள்ளதாக அந்த வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷவுக்கும் இடையில் இந்த வருடத்தின் முதலாவது தேர்தல் தொடர்பில் கடந்த மார்ச் மாதம் முதல் 4 சுற்றுப் பேச்சுக்கள் இடம்பெற்றுள்ளதுடன் ஐந்தாவது சுற்றுப் பேச்சுவார்த்தை நேற்று இடம்பெற்றது.
முதலில் பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் என பசில் ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்ட பிரேரணை தொடர்பில் மீண்டும் கலந்துரையாடப்பட்ட போதிலும், ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் பொதுத் தேர்தலை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என ஜனாதிபதி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி, பொதுத் தேர்தலை நடத்துவது பயனற்றது என்பதால், பொதுத் தேர்தலை நடத்தும் யோசனையை பசில் ராஜபக்ச தரப்பினர் கைவிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதித் தேர்தலை நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவாரா இல்லையா என்பது குறித்து ஜூலை நடுவாரத்தில் அறிவிக்கப்பட உள்ளதாகவும் அதே வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.
எவ்வாறாயினும், ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதிக்கு ஆதரவளிப்பதா இல்லையா என்பது தொடர்பில் இந்த கலந்துரையாடலில் உறுதியான வாக்குறுதி எதுவும் வழங்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, நாட்டின் தற்போதைய பொருளாதார மற்றும் அரசியல் நிலைமைகள் தொடர்பில் பல தரப்பினரும் தமது கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.