2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாக இன்னும் சுமார் 90 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், உலகின் தலைசிறந்த விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகி வருகிறார்கள்.
தாடி எவ்வளவு நீளமாக இருக்கலாம் என்பது முதல் ஒரு தடகள வீரர் தனது ‘ரத்தம் தோய்ந்த கைக்குட்டையை’ என்ன செய்ய வேண்டும் என்பது வரை சில அசாதாரணமான ஒலிம்பிக் விதிகள் உள்ளடக்கப்பட்டுள்ளது.
ஒலிம்பிக் மல்யுத்த வீரர்கள் களத்தில் வியர்த்தபடி வருவதற்கு அனுமதிக்கப்படுவதில்லை. போட்டியின் தொடக்கத்தில் நடுவர் இரு போட்டியாளர்களையும் ஈரப்பதம் உள்ளதா என்று சோதிப்பார்.
தேவைப்பட்டால் மீண்டும் உடலை நன்றாக துடைத்துக்கொண்டு வாருங்கள் எனக்கூறி அவர்களை அனுப்பலாம். உடலில் காணப்படும் எண்ணைய் பிசுக்கு அல்லது ஒட்டும் தன்மை கொண்ட பொருளுக்கும் இதே விதி பொருந்தும்.
ஒலிம்பிக் மல்யுத்த வீரர்கள் ‘ப்ளட் ட்ராக்’ என்று அழைக்கப்படும் ஒரு கைக்குட்டையை தங்கள் உடைக்குள் செருகி எடுத்துச் செல்லலாம்.
போட்டியின் போது ஏற்படும் காயங்களிலிருந்து வழியும் ரத்தத்தைத் துடைக்க அல்லது களத்தில் விழும் உடல் திரவங்களை சுத்தம் செய்ய இந்த துணி பயன்படுத்தப்படுகிறது.
எல்லா விளையாட்டு நிகழ்வுகளிலும் பங்குபெறும் விளையாட்டு வீரர்கள் தாங்கள் என்ன அணியலாம் மற்றும் அணியக்கூடாது என்பதற்கான தெளிவான விவரக்குறிப்புகளைப் பெறுகின்றனர்.
பிஎம்எக்ஸ் (BMX) ரைடர்கள் (சைக்கிள் ஓட்டும் வீரர்கள்), மணிக்கட்டு வரை நீளமுள்ள தளர்வான, நீண்ட கை ஜெர்சிகளை அணிய வேண்டும்.
உடல்நலம் மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக பல விளையாட்டு நிகழ்வுகளில் விளையாட்டு வீரர்கள் சிறிய நகங்களை வைத்திருக்கவே அனுமதிக்கப்படுகின்றனர்.