இந்தியா பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கி டிசம்பர் மாதம் 23-ம் தேதி வரை நடைபெற உள்ளது. பாராளுமன்ற கூட்டத்தொடரின் பல்வேறு அமர்வுகளிலும் பல முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட உள்ளன. குறிப்பாகஇ 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் மசோதாவை மத்திய விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் டோமர் மக்களவையில் தாக்கல் செய்தார்.
இந்த மசோதா குறித்து விவாதிக்க வேண்டும் என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ஆதிரஞ்சன் சவுத்திரி வலியுறுத்தினார். எனினும் உறுப்பினர்களின் ஆதரவுடன் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.
இதன் மூலம் 3 வேளாண் சட்டங்களையும் திரும்ப பெறும் நடவடிக்கையின் முதல்படி தொடங்கியுள்ளது. இந்த மசோதா பின்னர் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும். அவர் ஒப்புதல் அளித்து அரசாணை வெளியிட்ட பிறகே 3 வேளாண் சட்டங்களும் அதிகாரபூர்வமாக இரத்தாகும் என்பது குறிப்பிடத்தக்கது.