இஸ்ரேலில் உள்ள இராணுவ தளங்களை நோக்கி லெபானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பு ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. இதனால், மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ளது.
பலஸ்தீனத்தின் காஸாவில் உள்ள ஹமாஸ் அமைப்பினர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7 ஆம் திகதி இஸ்ரேலுக்குள் நுழைந்து திடீர் தாக்குதல் நடத்தினர். அன்று ஒரே நாளில் 1,200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் 250 பேரை பணய கைதிகளாக ஹமாஸ் அமைப்பினர் கடத்திச் சென்றனர்.
இதைத் தொடர்ந்து கடும் கோபம் அடைந்த இஸ்ரேல், ஹமாஸ் மீது இராணுவ தாக்குதலை முன்னெடுத்தது. ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் அழிக்கும் வரை ஓயமாட்டோம் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சபதம் விடுத்துள்ளார். இரு தரப்பினருக்கும் இடையே 6 மாதங்களுக்கும் மேலாக இந்த சண்டை நீடித்து வருகிறது.
இதனால் இலட்சக்கணக்கானோர் தங்களது குடியிருப்பை விட்டு வெளியேறி அண்டை நாடுகளான எகிப்து, லெபனான் எல்லையில் உள்ள அகதிகள் முகாமில் தங்கி வருகின்றனர். ஆனால் அகதிகள் முகாமை குறிவைத்தும் இஸ்ரேல் அவ்வப்போது தாக்குதல் நடத்துகின்றது. இஸ்ரேல் – ஹமாஸ் இடையே உடனடியாக போர் நிறுத்தத்தை கொண்டு வரவேண்டும் என்று உலக நாடுகள் தீவிரமாக வலியுறுத்த தொடங்கின.
இஸ்ரேலுக்கு ஆதரவாக நின்ற அமெரிக்கா கூட, உடனடியாக போரை நிறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டது. ஆனாலும் இஸ்ரேல் போர் நிறுத்தத்திற்கு சம்மதம் தெரிவிக்காமல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கிடையே, சிரியாவில் உள்ள ஈரான் தூதரகத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சில ஈரான் தளபதிகள் கொல்லப்பட்டனர்.
இதனால் கொந்தளித்த ஈரான், இஸ்ரேல் மீது சரமாரியாக ஏவுகணை தாக்குதலை நடத்தியது. இருப்பினும், இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்பு இந்த தாக்குதலை முறியடித்துவிட்டது. இந்த அடுத்தடுத்த நிகழ்வுகளால் மத்திய கிழக்கு நாடுகளில் உச்ச கட்ட பதற்றம் நிலவுகிறது. இஸ்ரேல் – ஈரான் இடையேயான போர் வெடிக்கும் அளவுக்கு பதற்றம் ஏற்பட்டு தற்போது சற்று இந்த மோதல் தணிந்துள்ளது.
இதனிடையே, நேற்று இரவு இஸ்ரேல் இராணுவ தலைமையகத்தை குறிவைத்து லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பு ராக்கெட் வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. கத்யுஷா வகை ராக்கெட்டுகளை ஏவி அடுத்தடுத்து தாக்குதல் நடத்தியுள்ளது. லெபானில் உள்ள குழுவான ஹிஸ்புல்லா அமைப்பிற்கு ஈரான் நிதி உதவி அளித்து வருகிறது.
லெபனானின் தெற்கு பகுதியில் உள்ள கிராமங்களை குறிவைத்து இஸ்ரேல் அத்துமீறி தாக்குதல் நடத்தியதாகவும் இதற்கு பதிலடியாகத்தான் 12 க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை ஏவி ஹிஸ்புல்லா தாக்குதல் நடத்தியதாகவும் கூறப்படுகிறது. ராக்கெட் தாக்குதலை இஸ்ரேலும் உறுதி செய்துள்ளது.
இஸ்ரேல் இராணுவம் கூறுகையில், லெபனானில் இருந்து எயின் ஸெடிம் பகுதியை நோக்கி 35 க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் எந்த சேதமும் ஏற்படவில்லை. ராக்கெட் ஏவியதற்கு பதிலடியாக இஸ்ரேலும் தாக்குதல் நடத்தி வருவதாக தகவல்கள் கூறுகின்றன.