பலஸ்தீனம் மீது இஸ்ரேல் நடத்தி வரும் போர் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக ஐநா தெரிவித்திருக்கிறது. அதாவது ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கும் காஸாவில் ஒரு குழந்தை போரால் உயிரிழக்கிறது அல்லது படுகாயமடைகிறது என்று ஐநா கூறியுள்ளது.
காஸா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் சமீபத்தில் உச்சத்தை தொட்டிருக்கிறது. சில நாட்களுக்கு முன்னர் ஐநா பணியாளர்களை ஏற்றி சென்ற வாகனம் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதலை நடத்தியது. இதில் 7 பேர் கொல்லப்பட்டனர். எனவே உடனடியாக போர் நிறுத்தத்தை கொண்டு வரவேண்டும் என்று உலக நாடுகள் தீவிரமாக வலியுறுத்த தொடங்கின. இது நாள் வரை இஸ்ரேலுக்கு ஆதரவாக நின்ற அமெரிக்கா கூட, உடனடியாக போரை நிறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டது.
ஆனால், போர் தற்போதுவரை நிற்கவில்லை. 34,000க்கும் அதிகமானவர்கள் இந்த போரில் உயிரிழந்துள்ளனர். இதில், பாதிக்கும் மேற்பட்டவர்கள் பெண்களும், குழந்தைகளும்தான். மட்டுமல்லாது போர் காரணமாக காஸாவுக்குள் நிவாரண பொருட்கள் எதுவும் வரவில்லை. இதனால் உணவுக்கும், குடிநீருக்கும் பஞ்சம் ஏற்பட்டிருக்கிறது. நோயாளிகள், கர்ப்பிணிகள், முதியவர்கள் உணவு கிடைக்காமல் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர். தொற்று நோய் பாதிப்புகளும் தீவிரமடைந்துள்ளன.
இதற்கிடையில் போர் நிறுத்தம் கோரி ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் பலஸ்தீன ஆதரவு நாடுகள் கொண்டுவரும் தீர்மானங்களை, அமெரிக்காவும், பிரிட்டனும் தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி இரத்து செய்து வருகிறது. எனவே இந்த போர் மத்திய கிழக்கு முழுவதும் பரவும் அபாயம் எழுந்திருக்கிறது.
இந்நிலையில் பலஸ்தீனத்தின் தற்போதைய நிலை குறித்து ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் (UNICEF) வெளியிட்டுள்ள சில தகவல்கள் பெரும் அதிர்ச்சியை கிளப்பியிருக்கிறது. அதாவது இஸ்ரேல் தொடுத்துள்ள போர் காரணமாக பலஸ்தீனத்தில் ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கும் ஒரு குழந்தை உயிரிழக்கிறது அல்லது படுகாயமடைகிறது என்று கூறியிருக்கிறது.
தற்போது காஸாவின் ரஃபா நகரின் மீது இஸ்ரேல் தாக்குதலை நடத்தி வருகிறது. நேற்று நடந்த தாக்குதலில் சுமார் 10 பேர் உயிரிழந்திருக்கின்றனர். கடந்த அக்டோபர் மாதம் 7ம் திகதி தொடங்கி தற்போது வரை 34,049 பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 76,901 பேர் காயமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 37 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள், 68 பேர் காயமடைந்துள்ளார்கள்.
மறுபுறம் ஈரானுடன் இஸ்ரேல் போரை தூண்டி வருகிறது. கடந்த ஏப்ரல் 1ம் திகதி யாரும் எதிர்பார்க்காத வகையில், சிரியாவின் டமாகஸ்கஸில் உள்ள ஈரானின் துணை தூதரகம் மீது இஸ்ரேல் திடீரென தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலில் ஈரானின் முக்கிய இராணுவ அதிகாரிகள் 2 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலை நடத்தியது இஸ்ரேல் என்று அனைவருக்கும் தெரிந்திருந்தாலும், இஸ்ரேல் இதனை ஒப்புக்கொள்ளவில்லை.
எனவே ஈரான் பதிலடி கொடுக்க களத்தில் இறங்கியது. இந்த தாக்குதல் குறித்த ஏற்கெனவே அமெரிக்கா எச்சரித்திருந்தது. இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தக்கூடாது என்றும், மீறி நடத்தினால் விளைவுகள் மோசமாக இருக்கும் எனவும் கூறியிருந்தது. இருப்பினும் இதனை மீறி ஈரான் ஏப்ரல் 14ம் திகதி தாக்குதலை தொடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.