முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளிநாடு செல்வது தொடர்பில் சந்தேகம் நிலவுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டுள்ள பின்னணியில், முன்னாள் ஜனாதிபதி வெளிநாடு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேற்படி அறிக்கை தொடர்பில் விசாரணை நடத்துமாறு கோரி குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் தாம் செய்த முறைப்பாடு தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக காவிந்த ஜயவர்தன நேற்று(10) குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வருகை தந்தார்.
இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஈஸ்டர் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவரை அறிந்திருந்ததாகவும், அதனை மறைத்துவிட்டதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
அந்த தாக்குதலில் உயிரிழந்த அப்பாவி மக்களின் மரணத்திற்கு காரணமான நபரை மறைப்பதற்கு அல்லது விசாரணையை தவறாக வழிநடத்தும் நோக்கில் அவர் செயற்படுகின்றாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்படி, முன்னாள் ஜனாதிபதி, அவரது கருத்துக்களில் இருந்து தப்ப முடியாது எனவும், அவ்வப்போது தனது அறிக்கைகளை மாற்றிக் கொள்வதாகவும் காவிந்த தெரிவித்தார்.