ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த ரஷித் கான் உலகின் தலைசிறந்த டி20 பந்து வீச்சாளராக திகழ்ந்து வருகிறார். உலகளவில் நடைபெறும் பெரும்பாலான தொழில்முறையான டி20 லீக்கில் விளையாடி வருகிறார்.
ஐபிஎல் கிரிக்கெட்டில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். ஒருவேளை அவரது பந்து வீச்சு எடுபடவில்லை என்றால் பீல்டிங் மற்றும் பேட்டிங்கிலும் அணியை வெற்றிபெற வைக்க துடிப்பார். அணியின் வெற்றிக்காக தனது 100 சதவீத பங்களிப்பை கொடுக்க எப்போதும் தவறியதில்லை.
நேற்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிராகவும் அப்படித்தான் பேட்டிங்கில் களம் இறங்கி 11 பந்தில் 24 ரன் எடுத்து குஜராத் அணியின் வெற்றிக்கு பங்காற்றினார். கடைசி பந்தில் 2 ரன்கள் தேவை என்ற நிலையில் பவுண்டரி அடித்து அணியை வெற்றி பெற வைத்தார்.
இந்த நிலையில் ரஷித் கான் குறித்து கவாஸ்கர் கூறுகையில் “அவர் வழக்கம்போல் விக்கெட் வீழ்த்துவது போல் விக்கெட் வீழ்த்தவிலலை. ஆனால், பேட்டிங்கில் அவரது பங்களிப்பு தேவை என்று வந்தபோது, களத்தில் இறங்கி அதை கச்சிதமாக செய்து முடித்தார்.
இந்த காரணத்தினால்தான் உலகளவில் உள்ள தொழில்முறை கிரிக்கெட் அணிகள் இவர் போன்ற வீரர்களை விரும்புகிறது. ரஷித் கானை அவர்கள் விரும்புகின்றனர். ஏனென்றால் அவர்கள் பேட்டிங், பந்து வீச்சு மற்றும் பீல்டிங்கில் அவருடைய உள்ளார்ந்த ஈடுபாட்டை காண முடியும்.
அவர் பீல்டிங் செய்யும்போது, தன்னால் முடிந்த அனைத்தையும் வெளிப்படுத்துவார். பந்து வீச்சாளர்கள் அவர்கள் பந்து வீசும் கைகளின் தோள்பட்டை கீழே படும்படி டைவிங் அடிக்க யோசிப்பார்கள். ஏனென்றால், ஒருவேளை தோள்பட்டையில் காயம் ஏற்பட்டால் அவர்களது பந்து வீச்சுக்கு மிகப்பெரிய வகையில் அச்சுறுத்தலாகிவிடும்.
ஆனால் அந்த பயம் ரஷித் கானிடம் இருக்காது. அவர் தனது 100 சதவீத முயற்சியை வெளிப்படுத்த விரும்புவார்.
இதேபோல் இன்னொரு வீரர் உள்ளார். அவர் ஐபிஎல் தொடரில் விளையாடவில்லை. அவர் பென் ஸ்டோக்ஸ். பென் ஸ்டோக்ஸ் பீல்டிங், பந்து வீச்சு, பேட்டிங் ஆகிவற்றில் 100 சதவீதம் தனது பங்களிப்பை வெளிப்படுத்துவார். இதேபோன்ற வீரர்களைத்தான் பயிற்சியாளர்கள், கேப்டன்கள் விரும்புவார்கள்”