ஹமாஸ் இற்கு எதிராக போர் நடத்தி வரும் இஸ்ரேல், காஸா மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதுவரை 32 ஆயிரத்திற்கும் மேற்மட்ட பலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். ரஃபா மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது.
இதற்கிடையே தண்ணீர், உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் காஸா மக்கள் கடுமையான வகையில் அவதிப்படுகிறார்கள். அவர்களுக்கு சமூக ஆர்வலர்கள் உதவி செய்து வருகிறார்கள். ஆனால், காஸாவுக்கு உதவி பொருட்கள் கொண்டு செல்வதில் சிக்கல் நீடித்து வருகிறது.
இஸ்ரேல் பெரும்பாலான எல்லைகளை அடைத்திருந்தது. கடந்த சில நாட்களுக்கு முன் உதவிபுரியம் நபர்கள் மீது இஸ்ரேல் இராணுவம் தாக்குதல் நடத்தியது. இதற்கு அமெரிக்க ஜனாதிபதி கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். மக்களை பாதுகாப்பதற்கான போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை என இஸ்ரேலை விமர்சித்திருந்தார்.
இந்த நிலையில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உடன் தொலைபேசியில் பேசுகையில், காஸா மக்களுக்கு கூடுதல் மனிதாபிமான உதவி பொருட்கள் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.
இதன் அடிப்படையில் எரேஸ் எல்லையை திறக்க இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. இந்த எல்லை இஸ்ரேல் – காஸா முனை இடையே உள்ளது. இந்த எல்லை வழியாக மக்கள் காஸா முனையில் இருந்து இஸ்ரேலுக்கு செல்ல முடியும்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஹமாஸ் இஸ்ரேல் நாட்டிற்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியதில் இருந்து இந்த எல்லையை இஸ்ரேல் மூடியது. மக்கள் இந்த எல்லையை கடக்கவும், இந்த எல்லையின் வான்வழியை பயன்படுத்தவும் தடை விதித்திருந்தது. இந்த நிலையில் மேலதிக மனிதாபிமான உதவிகள் காஸாவிற்கு கிடைக்கும் வகையில் இந்த எல்லை திறந்து விடப்படுகிறது.
அதேபோல் அஷ்தோத் துறைமுகத்தையும் பயன்படுத்த பாதுகாப்பு அமைச்சரவை ஒப்பதல் அளித்துள்து.
எரேஸ் எல்லை பெய்ட் ஹனோன் எனவும் அழைக்கப்படுகிறது. எரேஸ் எல்லை மக்கள் செல்வதற்காகவும், கெரேம் ஷலோம் பொருட்கள் கொண்டு செல்வதற்காவும் பயன்படுத்தப்பட்டது வந்தமையும் குறிப்பிடத்தக்கது.