நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தேர்தல் திருத்தச் சட்டமூலங்களினால் எதிர்வரும் தேர்தல்கள் பிற்போடப்படும் என எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டை அரசாங்கம் வன்மையாக நிராகரிப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தன தெரிவித்தார்.
அரசியலமைப்புச் சட்டப்படி சரியான நேரத்தில் தேர்தல் நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
தமக்கு கோஷங்கள் இல்லை என்பதாலேயே அரசாங்கம் தேர்தலை ஒத்திவைப்பதாக எதிர்க்கட்சிகள் பொய்ப் பிரச்சாரம் செய்து மக்களை தவறாக வழிநடத்த முயற்சிப்பதாக வஜிர அபேவர்தன தெரிவித்தார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (27) இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர்;
“.. அத்துடன் எதிர்காலத்தில் ஜனாதிபதியை எவ்வாறு பயன்படுத்திக் கொள்வது என்பது குறித்தும் சிந்திக்க வேண்டியுள்ளது. உங்கள் பாதையை மாற்றினால், மீண்டும் எரிபொருள் மற்றும் எரிவாயு வரிசையில் நீங்கள் அவதிப்பட வேண்டியிருக்கும். எனவே மக்கள் புரிந்துணர்வுடன் செயற்பட வேண்டும். நாட்டில் தற்போதைய அரசியல் செயற்பாடுகளை சீர்குலைத்து வெறுப்பு அரசியலில் ஈடுபடும் குழுக்கள் உள்ளன.
உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள அனைத்து சக்திகளிடமிருந்தும் இலங்கையை விடுவித்து ஆசியாவின் முன்னணி நாடாக எமது நாட்டை உயர்த்துவது ஜனாதிபதியின் நம்பிக்கையாகும்.
அதற்காக அர்ப்பணிப்புடன் இருக்கிறார். இந்நிலையை நாட்டு மக்கள் புரிந்து கொண்டு முன்னேற வேண்டும்..”