போராட்டம் என்ற போர்வையில் வன்முறையை விதைத்தவர்களிடம் இருந்து பாராளுமன்றம், பிரதமர் அலுவலகம், ஜனாதிபதி அலுவலகம் உள்ளிட்ட அரச சொத்துக்களை காப்பாற்றி நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட தான் மேற்கொண்ட நடவடிக்கைகளை மனித உரிமை மீறல் என சிலர் சுட்டிக்காட்ட முயன்றனர்.
இருந்தபோதும், அந்த நடவடிக்கையை அன்று எடுக்காமல் இருந்திருந்தால் இன்று நாட்டில் பொருளாதார ஸ்திரத்தன்மையை கட்டியெழுப்பியிருக்க முடியாது என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
பல்கலைக்கழக விரிவுரையாளர்களுடன் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பிலேயே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.
நாட்டின் தற்போதைய பொருளாதார வேலைத்திட்டம் மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகள் குறித்து கலந்துரையாடும் நோக்குடன் முன்னாள் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் இந்த சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தார்.
இந்த நிகழ்வில் கலந்து கொண்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உரையாற்றுகையில்,
நாட்டுக்கு புதிய கல்வி முறையை அறிமுகப்படுத்த அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது. அதற்காக பிரதமரின் செயலாளர் தலைமையில் குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.
பரீட்சை சுமையை குறைத்து பாடசாலை கல்வியில் மேற்கொள்ளப்படவுள்ள மாற்றங்கள் தொடர்பில் அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. பல்கலைக்கழக கட்டமைப்பில் பல மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எதிர்வரும் தேர்தலின் பின்னர் புதிய நாடாளுமன்றத்தின் கீழ் அந்த வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படும்.
இந்த வேலைத்திட்டத்தை வெற்றியடையச் செய்வதற்கு அனைவரினதும் ஆதரவு தேவை, 2035ஆம் ஆண்டளவில் நாட்டில் உயர் தரத்திலான கல்வி முறையை உருவாக்குவதே எமது நோக்கமாகும் என்றார்.