நேற்று முன்தினம் நிவாரணங்கள் சுமந்த 42 ஆவது விமானம் அரீஷ் விமான நிலையத்தினை சென்றடைந்தது. இதற்கு மேலாக பல நிவாரணம் தாங்கிக் கப்பல்கள் பலநூறு கனரக கண்டைனர்கள் என நிவாரண விநியோகங்கள் தொடர்ந்தவண்ணம் உள்ளன.
1949 தொடக்கம் செயற்படும் பாலத்தீன அகதிகளுக்கான ஐ. நா வின் நிவாரண அமைப்புக்கான (UNRWA) மேற்கத்திய உதவிகள் திட்டமிட்ட அடிப்படையில் குறைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக அமெரிக்கா அந்த நிதியை முழுமையாக நிறுத்தியுள்ளதாக நேற்று அறிவித்திருந்தது.
இந்த நிலையில் அந்த குறையை நிவர்த்தி செய்வதற்காக சென்ற புதன்கிழமையன்று சவூதி அரேபியா 40 மில்லியன் அமெரிக்க டாலர்களை அந் நிவாரண நிதியத்திற்காக வழங்குவதாக அறிவித்துள்ளது.
அமெரிக்க வெளியுறவுச் செயலரின் மேற்கத்திய நாடுகளுக்கான வருகையுடன் சேர்த்து சவூதி இவ்வறிவிப்பினை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
மேற்படி 40 மில்லியன் டாலர்கள் மூலம்; நிற்கதிக்குள்ளான பாலஸ்தீன மக்களில் மிகவும் தேவையுடைய சுமார் 450,000 பயனாளிகள் நிவாரணத்தினை பரிபூரணமாகப் பெறவேண்டும் என்ற உறுதிமொழி உடன்படிக்கையொன்றாகக் கைச்சாத்திடப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
அதேவேளை சர்வதேச அங்கீகாரம் பெற்ற இந்நிதியத்தின் செயற்பாடுகளையாவது சுதந்திரமாக மேற்கொள்ளவிடாது; இஸ்ரேல் உள்ளிட்ட தீய சக்திகள் முட்டுக்கட்டையாக நிற்பது சர்வதேசத்திற்கே ஒரு இழுக்காகும் எனவும் சவூதி மேலும் தெரிவித்துள்ளது.
காஸாவில் பதற்ற நிலை ஆரம்பமான நாள் தொடக்கம் இன்றுவரை காஸாவுக்கான நிவாரணங்களாக இருந்தாலும்சரி; இராஜதந்திர நகர்வுகளாக இருந்தாலும்சரி; அவைகளை தொய்வின்றி தொடர்ந்தும் சவூதி அரேபியா மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.