எரிவாயு பாவனையாளர்களின் பாதுகாப்பிற்காக எதிர்வரும் இரண்டு வாரங்களில் எரிவாயுவின் தரத்தை பாதுகாப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் மற்றும் ஒழுங்குமுறைகளை வெளியிடுவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டு வருவதாக கூட்டுறவு சந்தைப்படுத்தல் அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.
அமைச்சில் நேற்று (25) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர், அண்மைக்காலமாக இடம்பெற்ற எரிவாயு விபத்துக்களுக்கு தரமற்ற உபகரணங்களின் பாவனை மற்றும் அலட்சியமே பிரதான காரணங்களாகும் என்று குறிப்பிட்டார்.
திரவமாக்கப்பட்ட பெற்றோலிய வாயுவின் (LPG) இறக்குமதியானது ஏற்றுமதியின் போது பரிசோதிக்கப்பட்டதாகவும், ஆனால் இந்த அமைப்பை வலுப்படுத்தி இலங்கையில் சர்வதேச அளவில் பரிசோதிக்கும் ஆய்வகங்களை பதிவு செய்யவும் முன்மொழியப்பட்டதாகவும் அமைச்சர் கூறினார்.
உலகில் எரிவாயு விபத்துக்கள் ஏற்படாத நாடு இல்லை எனில் அபிவிருத்தியடைந்த நாடுகளுடன் ஒப்பிடும் போது நாம் ஒரு நாடாக மகிழ்ச்சியாக இருக்க முடியும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
லிட்ரோ எரிவாயு நிறுவனம் வருடாந்தம் சுமார் 35 மில்லியன் எரிவாயு சிலிண்டர்களை உள்ளூர் சந்தையில் விற்பனை செய்வதாகவும் வருடத்திற்கு 5-6 எரிவாயு விபத்துக்கள் ஏற்படுவதாகவும் அமைச்சர் கூறினார். இதேவேளை 2015ஆம் ஆண்டு முதல் லாஃப்ஸ் கேஸ் தொடர்பான 12 விபத்துகளும், வணிக வளாகங்களில் 9 விபத்துகளும், லாஃப்ஸ் கேஸ் தொடர்பான விபத்துகளும் நடந்துள்ளதாக அமைச்சர் கூறினார்.
2012 ஆம் ஆண்டு தொடக்கம் எரிவாயு பாவிக்கும் நுகர்வோரைப் பாதுகாக்கும் வகையில் பல வர்த்தமானி அறிவித்தல்கள் வெளியிடப்பட்டுள்ளதாகவும் இதுவரையில் எடுத்த நடவடிக்கையைத் தவிர வேறு ஏதேனும் நடவடிக்கை எடுக்க முடியுமா என நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை ஆராய்ந்து வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.