கடந்த 2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலை நடத்தியது யார் என்பது தனக்கு தெரியும் எனவும், அது தொடர்பில் நீதித்துறைக்கு தகவல்களை வெளியிட தயார் எனவும் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் அவர் மீண்டும் ஒரு கருத்தினை வெளியிட்டுள்ளார்.
அதாவது, “.. சுமார் மூன்று வாரங்களுக்கு முன்னர் தனக்கு கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே நான் இந்த கருத்துக்களை தெரிவித்தேன். நான் அச்சந்தர்ப்பத்திலேயே இந்த கருத்து தொடர்பில் நீதிமன்றில் கருத்து தெரிவிக்க வாய்ப்பளிக்கவும் கேட்டுக் கொண்டேன்.
நான் நீதிமன்றில் எனக்கு வாய்ப்பளிக்குமாறு கேட்டுக் கொண்டேன். எனக்கு உத்தரவு பிறப்பிக்கப்படின் நான் இரகசியமாக சாட்சி வழங்க எதிர்பார்த்துள்ளேன்.
இரகசியமாக சாட்சி வழங்கக் காரணம் என்னவென்றால், திறந்த சாட்சியாக நான் மாறினால் என்னுடைய உயிருக்கும் சில நேரம் என்னுடைய மனைவி பிள்ளைகளின் உயிருக்கும் ஆபத்து ஏற்படலாம். இது அரசியல் நோக்கங்களுக்காக அல்லது அரசியல் இலாபங்களுக்காக இந்த கருத்தினை நான் கூறவில்லை. மிகவும் நேர்மையாகவே கருத்தினை தெரிவித்தேன்..”
அண்மையில் கண்டியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது ஈஸ்டர் தாக்குதலின் உண்மையான சூத்திரதாரியை இதுவரை யாரும் வெளிப்படுத்தவில்லை என்று கூறிய அவர், விவரங்களை வெளியிட தான் தயாராக இருப்பதாகவும், ஆனால் அந்த தகவல்களை கண்டிப்பாக இரகசியமாக வைத்திருப்பது நீதிபதிகளின் பொறுப்பு என்றும் கூறிய கருத்தினால் இந்நாட்களில் பெரும் சர்ச்சை நிலைமை ஏற்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.