ரஷ்யாவுக்கும் அமெரிக்காவின் நேட்டோ இராணுவக் கூட்டணிக்கும் இடையே நேரடி மோதல் ஏற்பட்டால், அது நிச்சயம் மூன்றாம் உலகப் போராகத் தான் இருக்கும் என்று ரஷ்ய ஜனாதிபதி புதின் எச்சரித்துள்ளார்.
கடந்த 2022ஆம் ஆண்டு யாருமே எதிர்பார்க்காத வகையில் உக்ரைன் மீது ரஷ்யா போரை ஆரம்பித்தது. இது மேற்குலக நாடுகளுக்கும் ரஷ்யாவுக்கும் இடையேயான உறவைக் கடுமையாகப் பாதித்து உள்ளது.
இந்த போர் சுமார் 2 ஆண்டுகளை நெருங்கும் போதிலும் எப்போது முடியும் தெரியவில்லை. 1962க்கு பிறகு இல்லாத வகையில் ரஷ்யா மற்றும் மேற்குலக நாடுகளிடையே இதனால் இப்போது பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
இந்தப் போர் ஆரம்பித்த பிறகு அணு ஆயுதப் போரின் அபாயங்கள் குறித்து புதின் தொடர்ந்து எச்சரித்து வருகிறார். அணு ஆயுதங்கள் பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏற்படலாம் என்ற புதின், இருப்பினும் அணு ஆயுதங்களை உக்ரைன் போரில் பயன்படுத்த வேண்டிய சூழல் ஏற்படும் என்று நினைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
ரஷ்யாவுக்கும் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ ராணுவக் கூட்டணிக்கும் இடையே நேரடி மோதல் ஏற்பட்டால் அது மோசமான பேரழிவை ஏற்படுத்தும் என்ற அவர், அப்படி இரு தரப்பிற்கும் இடையே மோதல் ஏற்பட்டால் அது மூன்றாம் உலகப் போருக்குத் தான் இட்டு செல்லும் என்றும் அவர் தெரிவித்தார். பிரான்ஸ் உள்ளிட்ட மேற்குலக நாடுகளும் இதேபோன்ற கருத்தையே கூறி வரும் நிலையில், இப்போது புதினே இந்த கருத்து கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்ய தேர்தலில் வென்று 5ஆவது முறையாக ஜனாதிபதியாக இது தொடர்பாக புதின் மேலும் கூறுகையில், “ரஷ்யாவுக்கும் மேற்குலக நாடுகளின் நேட்டோ படைக்கும் இடையே மோதல் ஏற்பட்டால் அது மூன்றாம் உலகப் போரில் இருந்து ஒரு படி தொலைவில் தான் இருக்கும்.. இருப்பினும், இது நடக்கவே நடக்காது என்று சொல்ல முடியாது. இங்கே எது வேண்டுமானாலும் நடக்கலாம்.
ஏனென்றால், நேட்டோ இராணுவ வீரர்கள் ஏற்கனவே உக்ரைனில் இருக்கிறார்கள். போர் தொடர்வது யாருக்கும் நல்லது இல்லை.. அங்கே தொடர்ந்து பல நூறு பேர் உயிரிழந்து வருகிறார்கள். போரை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும். ஆனால், மேற்குலக நாடுகள் போரை முடிவுக்குக் கொண்டு வர விரும்புவது போல தெரியவில்லை.
மேற்குலக நாடுகள் பதற்றத்தை அதிகரிக்கும் வகையில் பேசுவதைத் தடுக்க வேண்டும். அவர்கள் அமைதியை ஏற்படுத்தப் பேச்சுவார்த்தை நடத்துவது போலத் தெரியவில்லை. அவர்கள் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையிலேயே பேசி வருகிறார்கள். நாங்கள் பேச்சுவார்த்தைக்கு இப்போதும் தயாராகவே இருக்கிறோம். இதற்காக நாங்கள் எதிரிகளைக் கண்டு அஞ்சுகிறோம் என்று பொருள் இல்லை. அண்டை நாடுகளுடன் நல்லுறவு வேண்டும் என்பதற்காகவே இந்த நிலைப்பாட்டை எடுக்கிறோம்.
ரஷ்யாவில் தேர்தல் சுதந்திரமாக நடக்கவில்லை எனச் சிலர் (மேற்குலக நாடுகள்) கூறுகிறார்கள், இது கேலிக்கூத்தாக இருக்கிறது. ரஷ்யாவில் மிகவும் நேர்மையான முறையில் தான் ஜனாதிபதி தேர்தல் நடந்துள்ளது.
அமெரிக்காவில் தான் ஜனாதிபதி தேர்தல் நேர்மையாக நடக்கவில்லை. அங்கே ஜனநாயகமானது தேர்தல் நடப்பதில்லை என்றும் அரசு அதிகாரம் தனக்கு எதிராகப் பயன்படுத்தப்படுவதாக டிரம்ப் கூட கூறுகிறாரே.. அங்கு நடப்பதைப் பார்த்து ஒட்டுமொத்த உலகமும் சிரிக்கிறது” என்று அவர் தெரிவித்தார்.
ரஷ்யச் சிறையில் எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னி மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், அது குறித்த கேள்விக்கு நேரடியாக எந்தவொரு விளக்கத்தையும் அளிக்காத புதின், நவல்னி காலமானார் என்று மட்டும் கூறியிருக்கிறார்.