உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நாளைய தினம் இலங்கைவரும் அடிமைத்துவத்தின் சமகால வடிவங்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அறிக்கையாளர் ரொமோயா ஒபொகாடா எதிர்வரும் டிசம்பர் மாதம் 3 ஆம் திகதிவரை நாட்டில் தங்கியிருப்பார்.
இக்காலப்பகுதில் ஆடையுற்பத்திக்கைத்தொழில், தேயிலைப்பயிர்ச்செய்கை, சுற்றுலாத்துறை உள்ளடங்கலாகப் பொருளாதாரத்தின் பல்வேறு துறைகளிலும் பணியாற்றும் தொழிலாளர்களின் நிலை தொடர்பில் அவர் ஆய்வுகளை மேற்கொள்வதுடன் தொழிலாளர்கள் தொடர்பான சட்டம் மற்றும் கொள்கைகளின் அமுலாக்கம் குறித்தும் மதிப்பீடுகளை மேற்கொள்வார்.
மேலும் அரசாங்கம் உள்ளடங்கலாக அரச கட்டமைப்புக்களின் பிரதிநிதிகள், தொழிற்சங்கப்பிரதிநிதிகள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட தரப்பினருடன் அடிமைத்துவத்தின் சமகால வடிவங்கள் தொடர்பில் செயற்திறன்வாய்ந்த கலந்துரையாடல்களை முன்னெடுப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாகவும் ஒபொகாடா தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான அவரது விஜயத்தின் நிறைவு நாளான டிசம்பர் 3 ஆம் திகதி (வெள்ளிக்கிழமை) கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகத்தில் நடத்தப்படவுள்ள ஊடகவியலாளர் சந்திப்பில்வைத்து ரொமோயா ஒபொகாடா அவரது ஆரம்ப அவதானிப்புக்களை வெளியிடுவார். அத்தோடு 2022 செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடரில் அவர் இலங்கை தொடர்பான விரிவான அறிக்கையை சமர்ப்பிப்பார்.