எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமது கட்சி சார்பிலான ஆதரவு குறித்து அகில மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் கருத்துத் தெரிவித்திருந்தார்.
“.. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக கொண்டு வரப்படும் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு கட்சி சார்பில் ஆதரவாக வாக்களிக்கவுள்ளோம். வெற்றி குறித்து எமக்குத் தெரியாது. அதிகமானோர் ஆளும்தரப்பில் உள்ளனர். கட்சி என்ற முறையில் நாம் ஆதரவாக வாக்களிக்கவுள்ளோம்.
ஜனாதிபதி தேர்தலில் கட்சி என்ற ரீதியில் நாம் யாருக்கு ஆதரவு வழங்குவது என இன்னும் தீர்மானிக்கவில்லை. ஜனாதிபதி தேர்தலா? நாடாளுமன்ற தேர்தலா? என்பது குறித்து இன்னும் தெரியாது. தேர்தல் அறிவித்ததும் அது குறித்து முடிவெடுப்போம்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் சஜித் அணியுடனே நாம் களமிறங்கினோம். ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவது குறித்து தீர்மானம் எட்டப்படவில்லை. நாம் எதிரணியில் இருக்கிறோம். அரசின் நல்ல செயற்பாடுகளுக்கு நாம் ஆதரவு வழங்குவோம். தீமை என்றால் நாம் எதிர்க்கிறோம்.
ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் யாருக்கு ஆதரவு என அறிவிப்போம்..” எனத் தெரிவித்திருந்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளராக சஜித் பிரேமதாச களமிறங்குவது உறுதியாகியுள்ள நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் ஜனாதிபதி தேர்தலின் தமது கட்சியின் ஆதரவு குறித்து ஊடகவியலாளர் கேட்கும் கேள்விகளுக்கு மழுப்பிக்கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.