எதிர்வரும் புனித ரமழான் மாதத்திற்கு முன்னர் காஸா – இஸ்ரேல் போர் நிறுத்தம் ஒன்றை எட்டும் பேச்சுவார்த்தைகள் எகிப்து தலைநகர் கெய்ரோவில் நேற்று (05) மூன்றாவது நாளாகவும் தொடர்ந்தது.
வடக்கு காஸாவுக்கு உதவிகள் செல்வது இஸ்ரேலிய படையால் முடக்கப்பட்டிருக்கும் சூழலில் அங்கு குழந்தைகள் பட்டினியால் உயிரிழந்து வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
முஸ்லிம்களின் புனித ரமழான் மாதம் ஆரம்பிப்பதற்கு இன்னும் ஒரு வாரத்துக்கும் குறைவான காலமே உள்ள நிலையிலேயே சர்வதேச மத்தியஸ்தர்கள் மற்றும் ஹமாஸ் பிரதிநிதிகள் கெய்ரோவில் கூடியுள்ளனர்.
இதில் ஆறு வாரம் போர் நிறுத்தம் மற்றும் தொடர்ந்து பிடித்து வைக்கப்பட்டிருக்கும் இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுவிக்கும் கைதிகள் பரிமாற்ற உடன்படிக்கை ஒன்றை எட்டுவதற்கே முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
எனினும் ரமழானுக்கு முன் போர் நிறுத்தம் ஒன்றை எட்டுவதற்கு இராஜதந்திர அழுத்தங்கள் அதிகரித்தபோதும் இந்தப் பேச்சுவார்த்தைகளில் இருந்து இஸ்ரேலிய பிரதிநிதிகள் விலகியுள்ளனர்.
உயிருடன் இருக்கும் பணயக்கைதிகளின் பெயர் பட்டியலை வெளியிட ஹமாஸ் மறுத்ததை அடுத்து இஸ்ரேல் இந்தப் பேச்சுவார்த்தைகளை புறக்கணித்திருப்பதாக இஸ்ரேல் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பேச்சுவார்த்தையை தொடர்ந்து முன்னெடுக்கும் வகையில் இஸ்ரேலுடன் தொடர்பில் இருப்பதாக எகிப்து பாதுகாப்பு வட்டாரங்கள் கடந்த திங்களன்று கூறியிருந்தன.
எனினும் பணயக்கைதிகள் பற்றிய விபரங்கள் ‘பேச்சுவார்த்தை செயல்பாட்டின் போது வெளியிடப்பட்ட எந்த ஆவணங்களிலும் அல்லது திட்டங்களிலும் குறிப்பிடப்படவில்லை’ என்று ஹமாஸ் மூத்த தலைவரான பஸம் நயிம் ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்.
‘(இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின்) நெதன்யாகு உடன்பாடு ஒன்றை எட்ட விரும்பாத நிலையில் பந்து தற்போது அமெரிக்காவின் பக்கம் உள்ளது’ என்றும் பஸம் நயிம் குறிப்பிட்டார்.
ஆனால் இஸ்ரேல் அங்கீகரித்த உடன்படிக்கை ஏற்கனவே கைவசம் இருப்பதாகவும் அது ஹமாஸின் ஒப்புதலிலேயே தங்கி இருப்பதாகவும் அமெரிக்கா கூறி வருகிறது. இதனை ஹமாஸ் நிராகரித்துள்ளது.
கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி இடம்பெற்ற பலஸ்தீன போராளிகளின் தாக்குதலின்போது கடத்தப்பட்ட சுமார் 250 பணயக்கைதிகளில் தொடர்ந்து 130 பேர் காஸாவில் இருப்பதாக இஸ்ரேல் நம்புகிறது. எனினும் இவர்களில் 31 பேர் உயிரிழந்திருப்பதாக அது கூறுகிறது.
காஸாவில் இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடரும் சூழலில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 97 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டு 123 பேர் காயமடைந்திருப்பதாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்மூலம் காஸாவில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 30,631 ஆக அதிகரித்திருப்பதோடு மேலும் 72,043 பேர் காயமடைந்துள்ளனர்.
இதில் கான் யூனிஸ் நகரில் கடந்த திங்கட்கிழமை இரவு இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதல் ஒன்றில் பக்காவின் குடும்பத்தின் 17 உறுப்பினர்கள் கொல்லப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதில் சிறுவர்களும் அடங்குகின்றனர்.
இதேவேளை வடக்கு காஸாவில் உள்ள இரு வைத்தியசாலைகளுக்கு சென்ற உதவிக் குழுக்கள், உணவு, எரிபொருள் மற்றும் மருந்துகளின் பற்றாக்குறைக்கு மத்தியில் அங்கு குழந்தைகள் பட்டினியில் உயிரிழக்கும் மோசமான நிலையை கண்டதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.