மருந்து மோசடிகளுக்கு இடமளிக்கப்பட மாட்டாது என சுகாதார மற்றும் கைத்தொழில் அமைச்சர் டொக்டர் ரமேஷ் பத்திரன வலியுறுத்தியுள்ளார்.
இன்று (01) கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையின் விசேட கண்காணிப்பு விஜயத்தில் கலந்து கொண்டு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை வலியுறுத்தினார்.
மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர், தற்போது பற்றாக்குறையாக உள்ள மருந்துகளை எதிர்வரும் 06 மாதங்களுக்குள் மீளப் பெற்றுக்கொடுக்கப்படும் என்றார். நிர்ணயிக்கப்பட்ட கொள்முதல் செயல்முறை மட்டுமே பின்பற்றப்படும் என்றும், நீண்ட நேரம் எடுக்கும் கொள்முதல் பணியில் பல்வேறு தரப்பினரும் ஈடுபடுவார்கள் என்றும், இவை அனைத்தும் வெளிப்படைத்தன்மையுடன் செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.
வைத்தியசாலைகளில் ஸ்கேனர்கள் பழுதடைந்துள்ளமை தொடர்பில் கருத்து தெரிவித்த சுகாதார அமைச்சர், தேவையான உபகரணங்களை இலங்கைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் எனவும் தெரிவித்தார். நாட்டில் உள்ள 46 CT இயந்திரங்களில் 03 இயந்திரங்களில் பிரச்சினைகள் காணப்படுவதாகவும், அந்த பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
அத்துடன் சுகாதாரத் துறையில் நிலவும் தொழில்சார் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டு அதற்கான தீர்வுகளை நிதி அமைச்சிடம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில் உரிய தீர்வுகளை வழங்க நிதி அமைச்சு செயற்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
கம்பஹா மாவட்டத்தின் கம்பஹா, மீரிகம உள்ளிட்ட சூழவுள்ள வைத்தியசாலைகளின் பரிசோதனை இன்று இடம்பெறவுள்ளதாகவும், வைத்தியசாலைகளில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பில் கவனம் செலுத்த எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.